‘பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்: கமல்ஹாசன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்று பரவலும் அதனையடுத்து வந்த ஊரடங்கு விதிமுறைகளும் ஒவ்வொருவரின் அன்றாடத்திலும், திட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பும் பிற தயாரிப்புப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த, நான் விரும்பிச் செய்கிற ஒன்று.
விக்ரம் பட பணிகள், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தோம். கொரோனா பெருந்தொற்று என்னையும் தாக்கியபோது, மருத்துவமனையிலிருந்து கூட போட்டியாளர்களையும், ரசிகர்களையும் சந்தித்தேன். இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓ.டி.டி.யில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்குக் கிடைத்தது.
விலகுகிறேன்
ஊரடங்கு விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில், என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.
ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன் பிப்ரவரி 20-ந் தேதி எபிசோட்டுக்குப் பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. தமிழில், பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள்தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களைச் சந்தித்து உரையாடி வந்த எனக்கு, இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு.
— Kamal Haasan (@ikamalhaasan) February 20, 2022
After a short break. pic.twitter.com/NfbUMz1GjY
இவ்வாறு கமல்ஹாசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story