குவைத் நாட்டில் நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” படத்தை வெளியிட தடை..!
அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” படத்தை வெளியிட குவைத் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியானது.
அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட பீஸ்ட் படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில்,பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் வலியுறுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, குவைத் நாட்டின் தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம், இந்த படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
இந்த தடைக்கான காரணம், படத்தில் பாகிஸ்தானை பற்றிய சித்தரிப்பு, பயங்கரவாதிகள் அல்லது வன்முறை குறித்த சித்தரிப்பு ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குவைத் நாட்டின் சென்சார் போர்டு, அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, திரைப்படத் தணிக்கை விஷயத்தில் மிகவும் கடுமையான போக்கை பின்பற்றி வருகிறது.
அதற்கு உதாரணமாக, சமீபத்தில் வெளியான இந்திய திரைப்படங்களான, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘குருப்’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘எப் ஐ ஆர்’ படங்கள் குவைத்தில் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதே சமயம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அரபு நாடுகளில் ‘பீஸ்ட்’ வெளியாக உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில், நடிகர் விஜய் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்த நிலையில், இப்போது பீஸ்ட் படம் குவைத்தில் திரையிட முடியாத சூழல் உள்ளதால், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சற்று சறுக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story