ரூ.400 கோடி வசூல் பொன்னியின் செல்வன்: இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழு (இ)ப்ப லாம்! நடிகர் பார்த்திபன் சர்ச்சை டுவீட்
இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டது என நடிகர் பார்த்திபன் டுவீட் செய்துள்ளார்.
சென்னை,
லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் ஆகும் நிலையில் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்திருந்தது.
அதில் தமிழகத்தில் மட்டும் 163 கோடி வசூலித்திருப்பதாகவும், அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவில் அதிகமாக வசூல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 400 கோடி ரூபாய் கடந்த மூன்றாவது தமிழ் படம் என்ற என்ற பெயரை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி 13 நாட்கள் மட்டுமே ஆகிறது என்பதால், இன்னும் வசூலில் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டையராக நடித்துள்ள பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100! என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது பொன்னியின் செல்வன் படம் இதுவரை 400 கோடி ரூபாயை வசூலித்துவிட்டது. இந்நிலையில் இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த விவதாதம் ஏதாவது பிரச்சனையை எழுப்பலாம் அப்படி பிரச்சினை வந்தால் பொன்னியின் செல்வன் படம் இன்னும் 100 கோடி ரூபாய் வரை வசூலித்துவிடும் என்று பார்த்திபன் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.