"நடிகர் தனுஷை வைத்து தனி படம்..." - ரூசோ பிரதர்ஸ் தகவல்


நடிகர் தனுஷை வைத்து தனி படம்... - ரூசோ பிரதர்ஸ் தகவல்
x

தனுஷின் கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டு விரைவில் ஒரு புதிய படத்தை எதிர்பார்க்கலாம் என ரூசோ பிரதர்ஸ் தெரிவித்துள்ளனர்.

கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்', 'சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' மற்றும் 'எண்ட் கேம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ இயக்கியுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் ரியான் கோஸ்லிங் (பிளேட் ரன்னர்) மற்றும் கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா) ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, மற்றும் ஜூலியா பட்டர்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 22-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடிகர் தனுஷ் மிக குறைந்த நேரம் வந்து சென்றாலும், அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ, இருவரும் ரசிகர்களிடம் டுவிட்டரில் உரையாடினர். அப்போது நடிகர் தனுஷ் பற்றி பேசுகையில், "இந்த படத்தில் அவருக்கு இரண்டு பெரிய சண்டைக் காட்சிகள் உள்ளன. நாங்கள் அவருடைய தீவிர ரசிகர்கள். அவருடன் வேலை செய்வதை நாங்கள் மிகவும் விரும்பினோம்" என்று தெரிவித்தனர்.

மேலும் தனுஷின் கதாபாத்திரம் குறித்து பேசிய போது, "இந்த படத்தில் தனுஷ், உலகின் மிகச்சிறந்த அசாசின்களில் ஒருவராக நடிக்கிறார். அவரை மனதில் வைத்து தான் அந்த கதாபாத்திரத்தை எழுதினோம். அவரது கதாபாத்திரத்தை முதன்மையாக கொண்டு விரைவில் ஒரு புதிய படத்தை எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்தனர். ரூசோ பிரதர்ஸ்-ன் இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story