நகைச்சுவைக்கு தாவிய வில்லன் நடிகர்


நகைச்சுவைக்கு தாவிய வில்லன் நடிகர்
x

மிரட்டலான வில்லனாக நடித்த ரவி மரியா தற்போது முழுமையான நகைச்சுவை நடிகராக மாறி இருக்கிறார்.

ஜீவாவின் 'ஆசை ஆசையாய்', மற்றும் 'மிளகா' படங்களை இயக்கிய ரவி மரியா. 'வெயில்', 'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்' படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்து தற்போது முழுமையான நகைச்சுவை நடிகராக மாறி இருக்கிறார்.

இதுகுறித்து ரவி மரியா கூறும்போது, ''எனது நகைச்சுவை வேடங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன. 'காட்டேரி' படத்தில் நான் நடித்த நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது. பெண்கள் அணியும் 'லெக்கின்ஸ்' உடையில் படம் முழுக்க நடித்திருந்தேன். இதனால் நிறைய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

வில்லனாக நடித்தபோது என்னை பார்க்கும் சிறுவர்கள் பயந்தனர். ஆனால் இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னிடம் வந்து மகிழ்ச்சியாக பேசுகிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

எம்.ஆர்.ராதா, மணிவண்ணன்போல வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நான் சிறப்பாக நடிப்பதாக பி.வாசு, சுந்தர்.சி போன்ற இயக்குனர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தினர். தனி நகைச்சுவை நடிகராக நடிக்கும்படி பலரும் வற்புறுத்துகிறார்கள். விரைவில் அது நடக்கும்.

வில்லனாக நடிப்பதை காட்டிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பது மனதுக்கு நிறைவை தருகிறது'' என்றார். தற்போது ரவிமரியா, 'சந்திரமுகி-2', 'வடக்குப்பட்டி ராமசாமி', 'லெக் பீஸ்', 'சான்றிதழ்', 'பார்ட்னர்' உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.


Next Story