'ஆடு ஜீவிதம்' - படம் எப்படி இருக்கு?..வாங்க பார்க்கலாம்


ஆடு ஜீவிதம் - படம் எப்படி இருக்கு?..வாங்க பார்க்கலாம்
x

'ஆடு ஜீவிதம்' படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது

திருவனந்தபுரம்,

மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 28-ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது.

இந்நிலையில் ஆடு ஜீவிதம் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

கேரளாவில் கர்ப்பிணி மனைவியுடன் வசிக்கும் பிருத்விராஜ் வீட்டை அடமானம் வைத்து ஏஜெண்ட் மூலம் அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். அங்கு அரபு முதலாளிக்கு அடிமையாகி பாலைவனத்தில் ஆடுகள் மேய்க்கும் பணிக்கு தள்ளப்படுகிறார்.

அங்கிருந்து தப்பிக்க நினைக்கும் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிய நாட்களை வலியோடு கடத்துகிறார். அவரால் இந்தியாவுக்கு திரும்ப முடிந்ததா? என்பது மீதி கதை.

பிருத்விராஜ் உடலை வருத்தி, குரலை வருத்தி கதாபாத்திரத்துக்காக பல தியாகம் செய்துள்ளார். கேரளாவில் இருக்கும்போது செழிப்பான கன்னங்கள், பாலைவனத்தில் அடிமையாக மாறியதும் தளர்ந்த நடை, உடல் எலும்பு தெரியும் தேகம், தண்ணீர் வறட்சியினால் தொண்டையில் இருந்து வர மறுக்கும் வார்த்தை என 'நஜீப்' கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்.

அமலாபால், ஏழ்மையிலும் கணவனிடம் கொஞ்சல், கெஞ்சல் என கதாபாத்திரத்தை ரசித்து செய்துள்ளார். பிருத்விராஜ் நண்பராக வரும் கே.ஆர்.கோகுல், ஆபத்பாந்தவனாக வரும் ஜிம்மி ஜீன் லூயிஸ் ஆகிய இருவரும் தங்கள் பங்கை மிக நேர்த்தியாக செய்துள்ளார்கள்.

தென்னை, நீரோடை என கேரளாவின் அழகை காண்பிக்கும் போதும் சரி, மணல் குன்றுகள், செங்குத்தான மலை, பேரீட்சை மரங்கள் என பாலைவனத்தை காண்பிக்கும் போதும் சரி சுனிலின் கேமரா சுழன்று சுற்றி படம் பிடித்திருப்பது அருமை. ஏ.ஆர்.ரகுமான் வெறுமையும், அமைதியுமாக போகும் திரைக்கதையை தன்னுடைய வாத்தியங்களால் அலுப்பு தட்டாதபடி தாளங்களால் நிரப்பியுள்ளார்.

குடும்பத்துக்காக வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் அங்கு என்னமாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் மிக யதார்த்தமாக சொல்லி கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் பிளஸ்சி. வீட்டுக்கு திரும்பும்போது என்னிடம் பொன், பொருள் எதுவுமில்லை, மிச்சமிருப்பது கொஞ்சம் ஆயுசு மட்டுமே என்று பிருதிவிராஜ் சொல்லும்போது மொத்த அரங்கமே அமைதியில் மூழ்குவது படத்துக்கான வெற்றி. பாலைவனத்தில் படமாக்கப்பட்ட நீளமான காட்சிகள் பலகீனமாக அமைந்துள்ளது.


Next Story