நடிகர் சங்க கட்டிடம் - நிதி திரட்ட நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமா?


Actors and Actresses perform to raise funds
x

நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தி நிதி திரட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு கடந்த 2016-ல் கட்டுமான பணிகளை தொடங்கினர்.

திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கூடம், நடிப்பு பயிற்சி மையம் போன்றவை கட்டப்பட்டு வந்தன. 60 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் 2019-ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் வழக்கு சர்ச்சைகளால் கட்டுமான பணிகள் முடங்கின. பின்னர் நாசர் தலைமையில் நிர்வாகிகள் பொறுப்பு ஏற்ற பிறகு வங்கியில் கடன் பெற்று மீண்டும் கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

கடனுக்கான வங்கி உத்தரவாத நிதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், கார்த்தி, தனுஷ், நெப்போலியன் ஆகியோர் தலா ரூ.1 கோடி நிதி வழங்கினர்.

கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் நிதி தேவைப்படுவதால் நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தி நிதி திரட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி முருகன், நடிகர் ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்து நடிகர் சங்க செயல்பாடுகள் மற்றும் கட்டிட பணிகள் குறித்து பேசினார்.

1 More update

Next Story