"அந்நியன்" ரீ-ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்
தெலுங்கில் "அபரிசித்துடு" என்ற பெயரில் 'அந்நியன்' திரைப்படம் ரீ-ரிலீசானது.
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்". இது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் பிரெஞ்சு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மூன்று சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தார். மேலும், பிரகாஷ் ராஜ், சதா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது. தெலுங்கில் "அபரிசித்துடு" என்ற பெயரில் இந்த திரைப்படம் வெளியானது. இதனை தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்நியன் போன்று வேடமிட்டு திரையரங்கில் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.