பையா 2-ம் பாகத்தில் ஆர்யா-ஜான்வி கபூர்
பையா 2-ம் பாகத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் பேசி வருகிறார்கள்.
வெற்றி பெற்ற படங்களில் இரண்டாம் பாகங்கள் வெளியாகி நல்ல வசூல் பார்த்துள்ளன. ஏற்கனவே ரஜினியின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, லாரன்சின் காஞ்சனா மற்றும் கலகலப்பு உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சியின் அரண்மனை 3 பாகங்கள் வெளியானது. தற்போது சந்திரமுகி, இந்தியன் படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடித்து 2010-ல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற பையா படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது.
பையா 2-ம் பாகத்தில் கார்த்தி நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் பேசி வருகிறார்கள். ஏற்கனவே தமிழ் படத்தில் நடிக்க ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் பையா 2-ம் பாகத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று தெரிகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.