சர்ச்சைக்குரிய வாசனை திரவிய விளம்பரம்: "கற்பழிப்பு ஒரு நகைச்சுவை என்று நினைக்கிறார்களா?" பாலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனம்!
பிரபல வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் இடம் பெற்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.
புதுடெல்லி,
பிரபல வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் இடம் பெற்ற காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.
அதில், சிலர் கடைக்கு பொருட்கள் வாங்க வருகின்றனர். அவர்களில் ஒருவர், நாம் 4 பேர் இருக்கிறோம். ஆனால், நம்மில் ஒரே ஒருவருக்குதான் இந்த ஷாட் கிடைக்கும் என பெண் ஒருவரின் பின்னால் நின்று கொண்டு பேசுகின்றனர்.இதனை கவனித்து, அதிர்ச்சியில் அந்த பெண் திரும்புகிறார். ஆனால், அதன்பின்னரே அவர்கள் கையில் ஷாட் வாசனை திரவியம் இருப்பது கண்டு அந்த பெண் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்.
பிரபல நிறுவனத்தின் மேற்கண்ட வாசனை திரவியத்துக்கான விளம்பரம் பாலியல் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய இந்த விளம்பரத்தை நீக்குமாறு டுவிட்டர் மற்றும் யூடியூப் தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மேற்படி நிறுவனங்களுக்கு மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்த விளம்பரம் பெண்களின் கண்ணியத்தை மீறும் வகையில் இருப்பதாக அதில் கூறியுள்ள மத்திய அரசு, தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.
இந்நிலையில், பல பாலிவுட் பிரபலங்கள் வாசனை திரவிய நிறுவனத்தின் "பெண் வெறுப்பு" விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான பர்ஹான் அக்தர் இந்த விளம்பரத்தை கடுமையாக சாடியுள்ளார் "இந்த துர்நாற்றம் வீசும் மறைமுக விளம்பரங்களை உருவாக்கவும், இதனை யோசிக்கவும், அனுமதி வழங்கவும் நம்பமுடியாத வகையிலான - ரசனை இல்லாத மனம் கொண்டவர்களால் தான் முடியும். இது அவமானம்!" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதே போல, பாலிவுட் நடிகை ரிச்சா சதாவும் கருத்து தெரிவித்துள்ளார். "கற்பழிப்பு ஒரு நகைச்சுவை என்று எல்லோரும் நினைக்கிறார்களா?
இந்த விளம்பரம் விபத்து அல்ல. ஒரு விளம்பரத்தை உருவாக்க, ஒரு பிராண்ட் முடிவெடுப்பதில் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. இந்த விளம்பரத்தை உருவாக்கிய ஏஜென்சி, அவர்கள் செய்யும் அசுத்தத்தமான சேவைக்காக வழக்குத் தொடர வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரை போலவே, ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், "இது வெட்கக்கேடான மற்றும் கேவலமாக உள்ளது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சர்ச்சைக்குரிய வாசனை திரவிய விளம்பரங்களை நிறுத்தி வைக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. விளம்பரங்களை தடை செய்துள்ளது. தொடர்ந்து உரிய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.