பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர் தோல்வி அடைந்தாலும், வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறதே, என்ன ரகசியம்?- குருவியார் பதில்


பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர் தோல்வி அடைந்தாலும், வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறதே, என்ன ரகசியம்?-   குருவியார் பதில்
x
தினத்தந்தி 2 May 2023 8:20 AM GMT (Updated: 2 May 2023 9:18 AM GMT)

கேள்வி:- ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி இணைந்து எத்தனை படங்களில் நடித்துள்ளனர்? (நிஷா, வண்ணாரப்பேட்டை, சென்னை)

பதில்:- 22 படங்கள். 'மூன்று முடிச்சு', 'ஜானி', 'போக்கிரி ராஜா' அதில் முக்கியமானவை!

****

கேள்வி:- காமெடி நடிகர்கள் சோகக் காட்சியில் நடித்தால் ரசிகர்கள் சிரிக்கிறார்களே.. சிரிக்கவும் வைத்து அழவும் வைத்த நாகேஷை போன்ற காமெடி நடிகர் யாரேனும் இன்றைக்கு இருக்கிறார் களா? (முருகன், நாகர் கோவில்)




பதில்: ஒரே ஒருவர் இருக்கிறார். சார்லி.. அவர் சிரிக்கவும் வைத்து அழவும் வைக்கும் ஆற்றல் மிக்க நடிகர்.. அது மட்டுமல்லாமல் `தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை' என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற ஒரே நடிகர் சார்லி தான்..!

****

கேள்வி:- அமெரிக்காவில் ஆடையின்றி சென்ற ஹாலிவுட் நடிகை அமண்டா பைனஸ் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளாரே? (ஜெ.மணிகண்டன், ஏ.கஸ்பா, ஆம்பூர்)


பதில்:- கேமரா வெளிச்சத்தில் இருப்பதாக நினைத்து, சூரிய வெளிச்சத்துக்கு வந்ததால் ஏற்பட்ட வினை!

****

கேள்வி:- கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுடன், ராஷ்மிகாவுக்கு காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறதே? (மல்லிகா நடராஜன், திருவண்ணாமலை)

பதில்:- கில்லித்தனமான அவரது பேட்டிங்கை பார்த்து கொஞ்சம் கிறுகிறுத்துவிட்டார், போலும். மற்றபடி ஒன்றும் இல்லை!

****

கேள்வி:- 3 தீபாவளி கண்ட 'ஹரிதாஸ்' பட சாதனையை எந்த தமிழ்ப்படமாவது முறியடித்திருக்கிறதா? (ஜி.ஸ்டீபன்ராஜ், மேற்பனைக்காடு, புதுக்கோட்டை)

பதில்:- தமிழில் இல்லை. ஆனால் மும்பை மராத்தா மந்திர் தியேட்டரில் ஷாருக்கான்-கஜோல் நடித்த 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கா' என்ற இந்தி படம் 26 ஆண்டுகள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்திருக்கிறது!

****

கேள்வி:- தமிழ் படங்கள் 'ஆஸ்கார்' விருதுகளை வாங்காதா? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)

பதில்:- அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை!

****

கேள்வி:- கமல்ஹாசனுடன் 'விருமாண்டி' படத்தில் நடித்த அபிராமி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்:-மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஆடிய கால் சும்மா இருக்குமா..!

****

கேள்வி:- 18 ஆண்டுகள் கடந்த பின்னரும் 'சினிமாவில் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே வருகிறேன்' என்று தமன்னா கூறியிருக்கிறாரே? (பீட்டர் இமானுவேல், ராமநாதபுரம்)

பதில்:- அனுபவமே படிப்பு என்பதை உணர்ந்ததால் வந்த பக்குவம்!

****

கேள்வி:- கோவை சரளாவுக்கு பிறகு நகைச்சுவையில் நடிகைகள் யாரும் பெரிதாக ஜொலிக்கவில்லையே... (கார்த்திக் சிவவேலன், பூமரத்துப்பட்டி)

பதில்:- இப்போதெல்லாம் நகைச்சுவையை கவர்ச்சி கவிழ்த்து விடுகிறதே..!

****

கேள்வி:- 'லவ் டுடே' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பவர்கள் யார்? (கர்ணா, தேவக்கோட்டை)

பதில்:- அமீர் கானின் மகன் ஜூனைத் கான், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் ஆகியோரின் பெயர் அடிபடுகிறது!

****

கேள்வி:- இப்போதைய சினிமாவில் கதாநாயகன் பிம்பத்தில் மூழ்காத நடிகர் யார்? (முகமது கனி, ஊத்தங்கரை)



பதில்:- விஜய் சேதுபதி. நல்ல கதை என்றால் சரி, கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், கால்ஷீட் ரெடி!

****

கேள்வி:- நடிகை ஈஸ்வரி ராவ் ஏன் படங்களில் நடிப்பதில்லை? (உஷா சிவகுமார், சிதம்பரம்)

பதில்:- 'காலா' படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார், ஏமாந்தார்!

****

கேள்வி:- அம்மா கதாபாத்திர நடிகைகள் சரண்யா பொன்வண்ணனுக்கும், விஜி சந்திரசேகருக்கும் என்ன வித்தியாசம்? (ஆர்.கண்ணன், பிள்ளையார்பட்டி)



பதில்:- சைவத்துக்கும், அசைவத்துக்கும் உள்ள வித்தியாசம் தான். முதலாம் நபர் நடிப்பில் சாதுவானவர். இரண்டாம் நபர் அடாவடி பேர்வழி!

****

கேள்வி:- ஹீமா குரோஷிக்கு திருமணம் எப்போது? (உத்தமன், தேனி)

பதில்:- மனம் கவர்ந்த கள்வன் இன்னும் கண்ணில் படவில்லையாம்!

****

கேள்வி:- பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர் தோல்வி அடைந்தாலும், வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறதே, என்ன ரகசியம்? (காசி ஆனந்தன், பரமக்குடி)




பதில்:- அது பரம ரகசியம்!

****

கேள்வி:- 'தனி ஒருவன்' படத்தின் 2-ம் பாகம் தயாராவதில் தாமதம் ஏன்?

பதில்:- 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு பின்னர் ஜெயம் ரவியை கையில் பிடிக்க முடியவில்லையாம். 'கால்ஷீட்' தரமுடியாத அளவுக்கு பல படங்களில் பிசியாக இருக்கிறார்!

****

கேள்வி:- திருமணம் ஆனாலும் ஹன்சிகா கவர்ச்சி போஸ் கொடுத்து படங்கள் வெளியிட்டுள்ளாரே, கணவர் திட்டமாட்டாரா? (மல்லிகா, மானாமதுரை)



பதில்:- அவர் தாராள மனம் கொண்டவராம்!

****

கேள்வி:- குழந்தை பெற்ற பின்பும் காஜல் அகர்வாலின் அழகு குறையவில்லையே, அது எப்படி? (வினய், விழுப்புரம்)

பதில்:- அது ஒப்பனையாளரின் கைவண்ணம் தான்!

****

கேள்வி:- சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக நடிகர் மாதவன் என்ன செய்து கொண்டிருந்தார்? (எஸ்.சண்முகம், சேலம்)

பதில்:- இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தார்!

****

கேள்வி:- சினிமாவில் கோலோச்சி ஓய்ந்திருக்கும் சிம்ரனுக்கும், ரம்பாவுக்கும் என்ன பட்டம் கொடுத்து கவுரவிக்கலாம்? (பாலமுருகன், கோச்சடை, மதுரை)


பதில்:- சிம்ரன்- உடுக்கை இடுப்பழகி. ரம்பா- வெல்வெட் தொடையழகி!

****

கேள்வி:- நயன்தாரா மீது தொடர்ந்து கிசுகிசுக்களும், விமர்சனங்களும் வந்துகொண்டே இருக்கிறதே... (ஆர்.குணசேகரன், திருச்சி)

பதில்:- அதை தாங்கும் மன வலிமை வேண்டும் என்ற வரம் கேட்டுத்தான் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்!

****

கேள்வி:- சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' படம் எந்த மாதிரியான கதையை கொண்டது? (முத்துக்குமரன், திருப்பூர்)




பதில்:- ஏலியன் வகை படம் என தகவல்!

****

கேள்வி:- கார்த்திக்கு கோட்-சூட் பொருத்தமாக அமையுமா? (குமுதா அழகேசன், சிவகங்கை)

பதில்:- எத்தனை உடை இருந்தாலும் கைலியும், (லுங்கி) 'ஜிகுஜிகு' கலர் சட்டையும் தான் அவருக்கு கச்சிதம். 'பருத்திவீரன்' கார்த்தியை அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமா..!


Next Story