திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்


திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 23 Nov 2023 6:13 AM GMT (Updated: 23 Nov 2023 7:23 AM GMT)

மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்த 'லியோ' படத்தில் மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் அளித்த ஒரு பேட்டியில், திரிஷா குறித்து சில சர்ச்சையான கருத்துகளை பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு குஷ்பு, திரிஷா ஆகியோர் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பல்வேறு தரப்பில் இருந்தும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன. மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கமும் எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையில் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்று விசாரணைக்கு ஆஜராகக்கோரி சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் இன்று ஆஜராகவில்லை. தொடர் இருமலால் பேசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக இயலாது என்றும் ஆஜராக அவகாசம் கேட்டும் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Next Story