படத்தின் பெயரை மாற்றினாரா விக்னேஷ் சிவன்...? ஈஷா மையத்தில் தொடங்கிய 'எல்.ஐ.சி' படப்பிடிப்பு


படத்தின் பெயரை மாற்றினாரா விக்னேஷ் சிவன்...? ஈஷா மையத்தில் தொடங்கிய எல்.ஐ.சி படப்பிடிப்பு
x

இந்த படத்தில் சீமான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது புதிய படத்தை இயக்க உள்ளார். 'எல்.ஐ.சி.' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதற்கிடையே தனது படத்தின் தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்தி உள்ளதாக இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் எல்.ஐ.சி நிறுவனம் படத்தின் பெயரை மாற்றக் கோரி செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் இந்த படத்தின் பெயரை விக்னேஷ் சிவன் மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் பெயரை 'எல்.ஓ.சி' என விக்னேஷ் சிவன் மாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கியது. அதுகுறித்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் 'எல்.ஐ.சி' என அவர் குறிப்பிடாததால் படத்தின் பெயரை மாற்றியுள்ளாரா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story