'வாடிவாசல்' அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்


வாடிவாசல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்
x

சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை,

தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தற்போது விடுதலை படத்தின் 2 -ம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இவர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை இயக்க உள்ளார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது. மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக டெஸ்ட் ஷூட் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் எடுக்கப்பட்டு அந்தப் புகைப்படங்களும் வெளியானது. மேலும், இந்தப் படத்திற்காக வாடிவாசல் காளையை தன் வீட்டில் வளர்த்து பயிற்சி எடுத்து வந்தார் சூர்யா. ஆனால், டெஸ்ட் ஷூட் முடிந்த பிறகு படம் குறித்து எந்தவிதமான அப்டேட்டும் இல்லை. வெற்றிமாறன் 'விடுதலை2' படப்பிடிப்பில் பிஸியாக, சூர்யாவோ 'கங்குவா', 'புறநானூறு', கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார்.


இதனால், படம் கைவிடப்பட்டு விட்டது என்றும் இதில் நடிப்பதாக இருந்த சூர்யா படத்தில் இருந்து விலகி விட்டார் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், இதுகுறித்து வெற்றிமாறன் - சூர்யா தரப்பில் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன் "விடுதலை 2 படப்பிடிப்பு தற்போது சென்று கொண்டுதான் உள்ளது. இன்னும் 15 முதல் 20 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முடிந்தபின் படம் ரிலீஸ் பணிகள் தொடங்கும். விடுதலை 2 படம் முடிந்ததும் வாடிவாசல் படப்பணிகள் தொடங்கும்" எனப் பேசியுள்ளார். இதனால், வாடிவாசல் திரைப்படத்தின் புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story