மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவை... நடிகர் பாலாவை பாராட்டும் ரசிகர்கள்...!


மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவை... நடிகர் பாலாவை பாராட்டும் ரசிகர்கள்...!
x
தினத்தந்தி 12 Jan 2024 2:02 PM GMT (Updated: 12 Jan 2024 2:28 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார்.

சென்னை,

சின்னத்திரையில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் பாலா. இவர் ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்டோருக்கான காப்பகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார்.

அவர் தன்னுடைய சொந்த செலவில் மலை கிராம மக்களுக்கு 4 இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து சுமாா் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 கொடுத்து உதவினார். சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்தில் ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை இன்று தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டி இருக்கிறது. அனைவராலும் அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல முடியவில்லை. அதனால் தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளோம்.

இந்த இலவச ஆட்டோ காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். அனகாபுதூர், பம்மல், பல்லாவரம் போன்ற இடங்களை சுற்றியுள்ள மக்கள் மருத்துவத்திற்காக இந்த ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாம். இது எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதை பார்த்துவிட்டு மற்ற பகுதிகளுக்கு ஆட்டோ வழங்குவேன். இந்த ஆட்டோ ஒட்டுனரின் சம்பளம் மற்றும் பெட்ரோல் என் சொந்த செலவில் வழங்கப்படும்" என்று கூறினார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story