மீண்டும் நடிக்க வந்த கவுதமி

நடிகை கவுதமி இந்தி வெப் தொடரில் நடிக்கிறார்.
தமிழில் ரஜினிகாந்தின் குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் கவுதமி. எங்க ஊரு காவல்காரன், நம்ம ஊரு நாயகன், வாய்க்கொழுப்பு, அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ராஜநடை, பணக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, அவசரபோலீஸ் 100, ருத்ரா, தேவர் மகன், நம்மவர், குருதிப்புனல் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 2006-ல் வெளியான சாசனம் படத்துக்கு பிறகு பல வருடங்களாக நடிக்காமல் இருந்த அவர் 2015-ல் பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது. பாபநாசம் படத்துக்கு பிறகு அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதமி மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்தி வெப் தொடரில் நடிக்கிறார். மும்பையில் நடைபெறும் வெப் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருவதாக தெரிவித்து அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.






