சினிமாவில் பட்ட கஷ்டங்கள் -நடிகை ரகுல் பிரீத் சிங்


சினிமாவில் பட்ட கஷ்டங்கள் -நடிகை ரகுல் பிரீத் சிங்
x

சினிமாவில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.

வட இந்தியாவில் இருந்து வந்து தென் இந்திய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரகுல் பிரீத் சிங். தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று வெற்றி பெற்று ரகுல் பிரீத் சிங்கை பிரபல கதாநாயகிகள் பட்டியலில் சேர்த்தது. தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமாவில் பட்ட கஷ்டங்கள் குறித்து ரகுல் பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், "சினிமா துறையில் எனக்கு எந்த பின்னணியும் இல்லை. மும்பை பாந்த்ராவில் ஒரு ஓட்டலில் உட்கார்ந்து கொண்டு எந்தெந்த ஆபீசுக்கு செல்ல வேண்டும். எத்தனை நடிகை தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று திட்டம் போடுவேன். ஏதாவது நடிகை தேர்வு நடந்தால் அங்கு செல்வேன். பையில் சில உடைகள் வைத்துக்கொண்டு காரிலேயே மாற்றிக்கொள்வேன். ஆனால் வாய்ப்புகள் வந்த மாதிரியே வந்து கைநழுவி போய்விடும். ஒவ்வொரு முறையும் என்னை படத்துக்கு ஒப்பந்தம் செய்து சில நாட்களுக்கு பிறகு என்னை மாற்றி விட்டு வேறு கதாநாயகியை நடிக்க வைத்தனர்.

இதையெல்லாம் நான் போராட்டம் என்று நினைக்க மாட்டேன். ஏனென்றால் கஷ்டப்படாமல் சுலபமாக எதுவும் கிடைத்து விட வேண்டும் என்று நினைப்பவள் அல்ல நான். அதனால்தான் போராட்டம் என்னும் வார்த்தை எனக்கு பிடிக்காது. அந்த நாட்களில் தன்னம்பிக்கையோடு அடி எடுத்து வைத்ததால்தான் இன்று நான் இந்த நிலைக்கு வந்து சேர முடிந்தது'' என்றார்.


Next Story