'இளையராஜாவுடன் நான் சண்டை போட்டுவிட்டேன்' - இயக்குனர் மிஷ்கின்


இளையராஜாவுடன் நான் சண்டை போட்டுவிட்டேன் - இயக்குனர் மிஷ்கின்
x

மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ள 'டெவில்' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா, சுபஸ்ரீ ராயகுரு மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார்.

மாருதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

'டெவில்' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா புகைப்படம்

இந்த விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், 'எல்லா பேய் பட கதைகளும் ஒரே கதைகள் தான், "டெவில்" படத்தின் கதையும் அதே தான். அமைதியான வீட்டிற்குள் கருப்பு உள்ளே வரும். வீடு சின்னாபின்னமாகி சிதிலம் அடையும், மீண்டும் அது புத்துயிர் பெற்று துளிர்க்கும். எல்லா படத்திற்கும் கதை ஒன்றுதான். நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் அல்ல; ஆனால் பைபிளை பலமுறை படித்திருக்கிறேன். இப்பொழுதும் இயேசு கிறிஸ்து என் பின்னால் நிற்பதைப் போல் உணர்கிறேன்.

இப்படத்தில் சில பாடல்களை முயற்சி செய்து இருக்கிறேன். ஒரு எட்டு வயதாக இருக்கும் போது என் தந்தையின் தோள்களில் அமர்ந்து சவாரி செல்லும் போது, 'அன்னகிளியே உன்னத் தேடுதே…' பாடலை கேட்டேன். அன்று முதல் இளையராஜா தான் எனக்கு குருநாதர். பின்னர் ஏன் இசையமைக்க வந்தாய் என்று கேட்கிறீர்களா..? நான் அவருடன் சண்டை போட்டுவிட்டேன்.. எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது. மேலும் மிகவும் போர் அடிக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் தான் இசையமைக்க முடிவு செய்தேன்.

இந்த இசை பயணத்தின் மூலம் நான் எந்த இடத்திற்கும் சென்று சேர விரும்பவில்லை. அப்படி நான் சென்று சேரும் இடம் என்று ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் காலடிகள் தான். இந்த உலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும். அவர்கள் தான் இசையமைப்பாளர்கள். நான் அல்ல' என்று கூறினார்.


Next Story