ஷார்ஜா சிறையில்... கழிவறை நீரில் காபி, டிடர்ஜெண்ட் பவுடரில் குளியல்; பாலிவுட் நடிகை குமுறல்


ஷார்ஜா சிறையில்... கழிவறை நீரில் காபி, டிடர்ஜெண்ட் பவுடரில் குளியல்; பாலிவுட் நடிகை குமுறல்
x

கழிவறை நீரில் காபி போட்டு குடித்தும், டிடர்ஜெண்ட் பவுடரில் குளிக்கவும் செய்தேன் என ஷார்ஜா சிறை அனுபவங்களை பாலிவுட் நடிகை பகிர்ந்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்தி திரையுலகை சேர்ந்த இளம் நடிகை கிறிசான் பெரைரா (வயது 27). சதக் 2 மற்றும் பட்லா ஹவுஸ் போன்ற படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் அவர் சார்ஜாவுக்கு சென்று உள்ளார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் கொண்டு சென்ற விருதுகளுக்கான கோப்பை ஒன்றில் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின் பெரைரா, சார்ஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது தாயார் பிரமீளா பெரைரா, தன் மகளை பழிவாங்க சதி திட்டம் நடந்து உள்ளது என குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் விசயங்கள் வெளிவந்தன.

இந்த விவகாரத்தில் மும்பையின் போரிவலி பகுதியை சேர்ந்த அந்தோணி பால் (வயது 32) மற்றும் அவரது கூட்டாளியான ராஜேஷ் பபோட் என்ற ரவி (வயது 42) ஆகிய இருவரை கைது செய்தனர். பிரமீளாவை பழி வாங்குவதற்காக கிறிசானை வழக்கில் சிக்க வைக்க பால் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில், அந்தோணி பேக்கரி கடை நடத்தி வருகிறார். திட்டத்தின்படி, சர்வதேச வலைதள தொடர் ஒன்றின் விளம்பரத்திற்காக கிறிசானை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்ப இருவரும் திட்டமிட்டு உள்ளனர். விமான நிலையத்தில் கிறிசானிடம் கோப்பையை வழங்கி உள்ளனர்.

அதில் அவர்கள் போதை பொருளை மறைத்து இருக்கின்றனர். இதேபோன்று வேறு 4 பேரையும் சிக்க வைக்க பால் திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிறிசான் ஷார்ஜா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார் என அவரது சகோதரர் கெவின் பெரைரா உறுதிப்படுத்தி உள்ளார். சிறை வாழ்க்கை பற்றி கிறிசான் தனது சமூக ஊடகத்தில் கடிதம் வடிவில் வெளியிட்டு உள்ள பதிவில், சிறையில் ஒரு பேப்பர், பேனா கிடைப்பதற்கு 3 வாரங்கள் மற்றும் 5 நாட்கள் ஆகி விட்டன.

எனது தலைமுடியை டைடு (டிடர்ஜென்ட் பொடி) கொண்டு அலசினேன். கழிவறை நீரில் காபி போட்டேன் என தெரிவித்து உள்ளார். பாலிவுட் படங்களை பார்த்தேன். எனது இலக்கு என்னை இங்கே கொண்டு வந்து விட்டது என அறிந்து சில நேரங்களில் எனது கண்களில் கண்ணீர் வரும்.

தொலைக்காட்சியில் நம்முடைய கலாசாரம், நம்முடைய திரைப்படங்கள் மற்றும் பிரபல முகங்களை பார்க்கும்போது சில நேரங்களில் நான் புன்னகைக்கிறேன். இந்தியர் என்பதிலும் இந்திய திரை துறையை சேர்ந்தவள் என்பதிலும் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

நீங்களே உண்மையான போர் வீரர்கள். என்னை பற்றிய செய்திகளை பகிர்ந்து, சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு உதவியதற்காக ஒவ்வொருவருக்கும் நான் எப்போதும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையை மற்றும் மற்ற அப்பாவி நபர்களையும் காப்பாற்றிய உங்களுக்கு எனது நன்றிகள் என தெரிவித்து உள்ளார். நீதி எப்போதும் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில், கிளின்டன் ரோட்ரிக்ஸ் என்பவரும் இதேபோன்று பாதிக்கப்பட்டு உள்ளார். டி.ஜே.வான அவரையும் ஷார்ஜாவுக்கு அந்தோணி அனுப்பி உள்ளார். அவரிடம் கஞ்சா வைத்த கேக் ஒன்றை கொடுத்து அனுப்பி இருக்கிறார். இதில், விமான நிலையத்தில் வைத்து ரோட்ரிக்சை போலீசார் கைது செய்தனர்.


Next Story