காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்- நடிகை கங்கனா


காதல்  திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்- நடிகை கங்கனா
x

நடிகை கங்கனா ரனாவத் தனது திருமணத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்துக் கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை,

கங்கனா ரனாவத் 2006-ம் ஆண்டு கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தனது முதல் படம் அபார வெற்றி பெற்றது அதுமட்டுமின்றி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அடுத்தடுத்து வோ லம்ஹே, பேஷன், குயின் என ஹிட் கொடுத்தார்.கங்கனா நடித்த குயின் படம் மிகவும் வித்தியாசமான கதைகளம் கொண்டது. இந்த படம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் 'சந்திரமுகி 2' திரைப்படமும் மற்றும் இந்தியில் 'தேஜஸ்' திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.

சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் நடனம் ஆடுவது பற்றி இவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆயின.

பாஜகவின் தீவிரமான ஆதரவாளராக உள்ள இவர், சினிமா துறையை தொடர்ந்து அரசியலில் கால் பதிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்தநிலையில், இவர் தனது 37வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது திருமண வாழ்க்கை குறித்து சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

தனது திருமண வாழ்க்கை குறித்து கங்கனா பேசுகையில், "ஒவ்வொரு பெண்ணும் தனது திருமணம் மற்றும் ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அப்படி தான் நானும் ஆசைப்படுகிறேன். ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கு இருக்கக் கூடிய கனவுதான். எனக்கும் திருமணம் செய்துக் கொண்டு புதிய குடும்ப அமைய வேண்டும். நான் எப்போதும் குடும்பத்துடன் தான் இருப்பேன். எனது குடும்பம் எனக்கு மிகவும் முக்கியம். எனவே, ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அது காதல் திருமணமாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.


Next Story