விறுவிறுப்பாக படமாகும் 'ஜெயிலர்', 'இந்தியன்-2'


விறுவிறுப்பாக படமாகும் ஜெயிலர், இந்தியன்-2
x

இந்த ஆண்டில் ரஜினிகாந்தின் `ஜெயிலர்' படமும், கமல்ஹாசனின் `இந்தியன்-2' படமும் ரிலீஸ் ஆவது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

இந்த வருடத்தின் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங் களாக ரஜினியின் `ஜெயிலர்', கமல்ஹாசனின் `இந்தியன் 2' படங்கள் உள்ளன. `ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். நெல்சன் இயக்குகிறார்.

இதில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கிறார். இது அவருக்கு 169-வது படம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி, பல்வேறு கட்டங்களாக மும்முரமாக நடந்து இப்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்கின்றனர். வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

`காலா', `பேட்ட', `தர்பார்' வரிசையில் இந்த படமும் அதிரடியில் கலக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்காக காத்திருக்கிறார்கள்.

`விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தில் நடிப்பதால் இதுவும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. `இந்தியன் 2' படப் பிடிப்பு தொடங்கியதில் இருந்தே பிரச்சினைகளை எதிர்கொண்டது. படப்பிடிப்பில் விபத்து, உயிர்ப்பலி, தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல் என்றெல்லாம் சிக்கல்கள் தொடர்ந்து, ஒருகட்டத்தில் இந்த படம் கைவிடப்பட்டதோ... என்று கூட எண்ணத் தோன்றியது. இப்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.

படப்பிடிப்பில் கமல்ஹாசன் மும்முரமாக பங்கேற்று வருகிறார். காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் `இந்தியன்-2' படத்தை திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த ஆண்டில் ரஜினிகாந்தின் `ஜெயிலர்' படமும், கமல்ஹாசனின் `இந்தியன்-2' படமும் ரிலீஸ் ஆவது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. நேரடி மோதல் இல்லாமல் தனித் தனியாக வருவதும் அவர்களுக்கு பரவசம்தான்.


Next Story