பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் ராஜினாமா செய்து இருக்க வேண்டும்- ரேணுகாச்சார்யா பரபரப்பு பேட்டி


பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் ராஜினாமா செய்து இருக்க வேண்டும்- ரேணுகாச்சார்யா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 29 Jun 2023 9:47 PM GMT (Updated: 30 Jun 2023 7:22 AM GMT)

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பா.ஜனதா தலைவர் பதவியை நளின்குமார் கட்டீல் ராஜினாமா செய்து இருக்க வேண்டும் என்று ரேணுகாச்சார்யா கூறியுள்ளார்.

பெங்களூரு:-

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சுயபரிசோதனை

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. கட்சியின் இந்த தோல்விக்கு மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தார்மிக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும். பா.ஜனதா மீது மக்களுக்கு இன்னும் மரியாதை உள்ளது. ஆனால் கட்சி தலைவர்கள் கட்சியை சரியான பாதையில் நிலை நிறுத்த வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். மத்தியிலும் ஆட்சியை பிடித்து மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டும்.

மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் மற்றும் பிற தேர்தல்களை எதிர்கொள்ள தொண்டர்களை தார்மிக ரீதியாக ஊக்கப்படுத்த வேண்டும். தோல்விக்கு காரணங்கள் என்ன என்பது குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த சுயபரிசோதனை செய்து கொள்ள கட்சி தலைவர்கள் சிலருக்கு ஆர்வம் உள்ளதா? என்று எனக்கு தெரியவில்லை.

நான் பேசவில்லை

சிலர் பா.ஜனதா அலுவலகத்தை தனியார் நிறுவனத்தை போல் மாற்றிவிட்டனர். சில தலைவர்கள் சர்வாதிகளை போல் செயல்படுகிறார்கள். தொண்டர்களை மிரட்டுகிறார்கள். தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன்பு காணொலி மூலம் கூட்டங்களை நடத்தினர். அவர்களின் முகத்தை பார்த்து கட்சி தொண்டர்கள் சோர்வடைந்தனர். நேரம் வரும்போது அந்த தலைவா்களின் பெயரை சொல்வேன்.

பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா குறித்து நான் பேசவில்லை. இங்குள்ள சில தலைவர்களை குறித்து தான் சொல்கிறேன். அவர்களிடையே போட்டி இருக்கிறது. செயல்பாட்டு அளவில் அனுபவம் இல்லாத, கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் கூட வெற்றி பெறாதவர்கள் எங்களை வழிநடத்தினர். தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் எங்களை வழிநடத்தினார்.

ஓட்டுகளை ஈர்ப்பதில் தோல்வி

அண்ணாமலை பெரிய கதாநாயகரா?. அவர் இங்கு வந்து 'போஸ்' கொடுத்துவிட்டு சென்றார். முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மைக்கு வணக்கம் செலுத்தியவர்களின் (அண்ணாமலை கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றினார்) பேச்சை அவர்கள் கேட்க வேண்டி இருந்தது. காங்கிரஸ் கட்சி உத்தரவாத திட்டங்களை அறிவித்தபோது, பா.ஜனதா தலைவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மிக தாமதமாக வெளியிடப்பட்டது. அது மக்களிடம் போய் சேரவில்லை. சில தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டனர். பா.ஜனதா தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் ஓட்டுகளை ஈர்ப்பதில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர்.

பா.ஜனதாவுக்கு இந்த நிலை

எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியை விட்டு நீக்கியது ஏன்?. பா.ஜனதாவின் தோல்விக்கு இதுவும் காரணம். பிரதமர் மோடி, எடியூரப்பா ஆகியோரின் முகங்கள் கட்சியின் வெற்றிக்கு தேவைப்பட்டனர். ஆனால் கட்சியின்

வெற்றிக்கு மற்ற தலைவர்களின் அளித்த பங்களிப்பு என்ன?. ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களுக்கு டிக்கெட் வழங்க மறுத்ததால் பா.ஜனதாவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சிலரின் ஆதரவாளர்களுக்கு டிக்கெட் வழங்க அந்த தலைவர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதா?. நான் காங்கிரசில் சேரும் திட்டம் இல்லை.

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். மோடியை மீண்டும் பிரதமராக பார்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம். நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். இதுகுறித்து கட்சி மேலிடத்திற்கு தெரிவித்துள்ளேன். என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.


Next Story