ரசிகர்களை மகிழ்வித்த கமல்ஹாசன்


ரசிகர்களை மகிழ்வித்த கமல்ஹாசன்
x

1978-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி 'நிழல் நிஜமாகிறது' படம் ரிலீசானது.

கமல்ஹாசன், சுமித்ரா, சரத்பாபு, ஷோபா, மவுலி நடித்திருந்தார்கள். மலையாளப் படத்தின் தழுவல்தான். இருந்தாலும் கே.பாலச்சந்தர் தனக்கே உரித்தான தனிப்பாணியில் அந்தப் படத்தை அற்புதமாக இயக்கி இருப்பார்.

சுமித்ரா ஒரு நடன ஆசிரியை. ஆண்களைக் கண்டால் அவருக்கு அறவே ஆகாது. திருமணத்தை வெறுப்பவர். அவருடைய அண்ணன் சரத்பாபு. அவருக்கு கமல்ஹாசன் நண்பராக வருவார். சுமித்ராவை சந்திக்க நேரும். அப்போது ஆண்கள் மீதான வெறுப்பை கமலிடமும் காட்டுவார்.

கல்மனம் கொண்ட சுமித்ரா போன்ற பெண்கள் எப்படிப்பட்டவர் என்பதை அந்த இடத்தில் கமல்ஹாசன் மூலம், கவிஞர் கண்ணதாசன் பாடலாக வடித்துக் காட்டுவார்.

"கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை

மலர் என்றானே கற்பனை செய்தானே!

வள்ளுவன், இளங்கோ, பாரதி என்றோர்

வரிசையை நான் கண்டேன்-அந்த

வரிசையில் உள்ளவர் மட்டும் அல்ல, அட! நானும் ஏமாந்தேன்!" என்பதுதான் அந்த அற்புதப் பாடலின் வரிகள்!

ஏ... கம்பனே! பெண்கள் மலரைப் போன்று மென்மையானவர் என்று நீ அறியாமல் சொல்லிவைத்தாய்!

இந்தப் பெண்ணைப் பார்த்தாயா?

இவள் மலர் போலவா தெரிகிறாள்?

நீ ஏமாந்து விட்டாயடா!

ஏமாந்தது நீ மட்டுமா? உன் வரிசையில் வள்ளுவன் ஏமாந்தான், இளங்கோ ஏமாந்தான், பாரதி ஏமாந்தான், அட! நானும்கூட ஏமாந்துடேனப்பா! என்று அந்த மாபெரும் கவிஞர்கள் வரிசையோடு தன்னையும் இணைத்துக் கொள்வார், கண்ணதாசன்.

ஒரு கட்டத்தில் கல்மனம் கொண்ட சுமித்ரா, கமலின் கண்ணடி பட்டு காதல்மனம் கொண்டவராக கனிந்து வருவார். அதைக் கவிஞர்,

"இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதா?

இதுவரை நடித்தது அது என்ன வேடம்?

இது என்ன பாடம்?

கல்லான முல்லை இன்றென்ன வாசம்?

காற்றான ராகம் ஏன் இந்த கானம்?

வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று

யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று

மன்மதன் என்பவன் கண் திறந்தானோ?

பெண்மை தந்தானோ?" என்ற பாடல் வழியாக உப்புக் கலந்து கஞ்சியைத் ஊறுகாயுடன் ஊற்றித் தருவது போல் எளிமையாகத் தந்திருப்பார்.

இலக்கண வரம்பை விட்டு

மொழி நெகிழும் போது

இனிய இலக்கியம் பிறக்கும்!

அதைத்தான் கவிஞர் இவ்வாறு சொல்கிறார்...

பெண்ணே! உன் பிடிவாத மனம் மாறுதோ? மென்மை ஆகுதோ?

இதுவரை நீ காட்டியது நடிப்புத் தானோ?

கல்லாக இருந்த உனது மனம் எப்படி இளகியது?

காற்றாக இருந்த ராகம் எப்படி பாட்டாக மாறியது?

அன்று வெறும் மேகமாக இருந்தது இன்று மழைதரும் கருமேகமாக ஆகிவிட்டதே?

பெண்ணே! உனக்கு இதை யார் சொல்லித் தந்தது? மன்மதன்தானே? அவன்தானே உன்னை மென்மை ஆக்கினான்? என்று கமல் மூலமாக கண்ணதாசன் கேட்பார். அந்த இரண்டு பாடல்களுமே இலக்கியத் தரம் வாய்ந்தவை. சாகா வரம்பெற்றவை! இன்னமும் முணுமுணுக்கப் படுபவை!

அந்தப் பாடல்களுக்காகவே படத்தை பலமுறை பார்த்தவர்கள் உண்டு!

நிழல் நிஜமாகிறது திரைப்படம் கோவை நாஸ் தியேட்டரில் 50 நாட்களைக் கடந்து ஓடியது. அந்த நேரத்தில் ஒரு படம் 50 நாட்களைத் தாண்டி ஓடினால், படத்தில் நடித்த நடிகர்கள் தியேட்டரின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அது போல் நடிகர் கமல்ஹாசனும் நாஸ் தியேட்டர் உரிமையாளர் சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

ஒருநாள் கோவை வந்த அவர், திடீரென்று நாஸ் தியேட்டருக்கு வருகைதந்தார். இதை அறிந்த ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டு ஆரவாரமிட்டனர்.

கமல்ஹாசன் அவர்களிடம் உரையாடி மகிழ்ந்தார். நிழல் நிஜமாகிறது, கமல்-ஸ்ரீபிரியா நடித்த நீயா? ஆகிய படங்களையும் சுப்பிர மணியம் வாங்கி வினி யோகம் செய்திருக் கிறார். அதற்காக அவரை சென்னைக்கு நேரில் அழைத்து கமல் பாராட்டியும் இருக்கிறார் இதை அவருடைய இளைய மகன் விஜய குமார் தெரிவித்தார்.


Next Story