கதை பஞ்சத்தால் 2-ம் பாகம் படங்களுக்கு தாவும் தமிழ் சினிமா
தமிழ் சினிமா கதை பஞ்சத்தில் தள்ளாடுகிறது என்றும், இதனாலேயே நிறைய படங்கள் தோல்வியை சந்திக்கின்றன என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் தியேட்டருக்கு வராமல் ஓ.டி.டி. தளங்கள் பக்கம் ஒதுங்குவதற்கும் இதுவே காரணம் என்ற பேச்சும் உள்ளது
மலையாள படங்களில் இருக்கும் கதைகளின் அழுத்தம், தமிழ் படங்களில் இல்லை என்பது தவிர்க்க முடியாத உண்மை. 'அங்கு கதைக்குள் நடிகர்களை கொண்டு வருகிறார்கள். இங்கு நடிகர்களை வைத்து கதை பண்ணுகிறார்கள்' என்கிறார் ஒரு மூத்த தயாரிப்பாளர்.
ஆரம்ப காலத்தில் சினிமாவில் இருந்த கதை இலாகா அழிந்து, இயக்குனர் ஒருவரே கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்து வேலை களையும் எடுத்துக்கொண் டதுதான், கதை இல்லாத படங்கள் வருவதற்கு இன்னொரு காரணம் என்றும் கூறுகின்றனர். இதனாலேயே தயாரிப்பாளர்களின் கவனம், ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்த இரண்டாம் பாகம் கலாசாரத்தை, தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர், கமல்ஹாசன்தான்.
அவர் தான் நடித்த 'கல்யாணராமன்' திரைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜப்பானில் கல்யாணராமன்' என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை எடுத்தார். 1982-ம் ஆண்டு நடிகர் பிரேம்குமார் நடித்த 'குரோதம்' படத்தின் வெற்றியால், 2000-ல் அதன் இரண்டாம் பாகம் வெளி யானது. ஆனால் அது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
சமீப கால இரண்டாம் பாகம் படங்களுக்கு, லாரன்சின் 'முனி' படத்தின் அடுத்த பாகமாக வந்த 'காஞ்சனா'வின் வெற்றி அடித்தளமாக அமைந்தது. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் '2.0' என்ற பெயரில் வந்து வசூலில் பட்டையை கிளப்பியது. கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்', விக்ரமின் 'சாமி', அஜித்குமார் நடிப்பில் 'பில்லா', விஷாலின் 'சண்டக்கோழி', தனுசின் 'மாரி', 'வேலை இல்லா பட்டதாரி', விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா' மற்றும் 'சென்னை- 28', 'ஜீவி', 'கலகலப்பு' படங்களின் இரண்டாம் பாகங்களும் வந்தன. சூர்யாவின் 'சிங்கம்', சுந்தர். சியின் 'அரண்மனை' ஆகிய படங்கள் 3 பாகங்கள் வரை வெளியானது.
சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் 2-ம் பாகம் வந்தது. இப்படி அடுத்த பாகமாக வந்த சில படங்கள் வெற்றியையும், சில படங்கள் முதல் பாகத்தை விட குறைவான வசூலையும் கொடுத்துள்ளன. இப்போது இன்னும் நிறைய படங்களின் இரண்டாம் பாகங்கள் படப் பிடிப்பிலும், சில படங்கள் படப்பிடிப்புக்கு தயாரான நிலையிலும் உள்ளன. கமல்ஹாசனின் 'இந்தியன்-2' படப்பிடிப்பு பாதி முடிந்துள்ளது. வடிவேலுவின் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் முடங்கி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் நடித்து ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திய 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வரத் தயாராகிறது. 'சதுரங்க வேட்டை-2' படப் பிடிப்பு முடிந்துள்ளது. ரஜினியின் 'சந்திரமுகி' இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடித்து வருகிறார். 'ஜிகர்தண்டா- 2' படமும் அவர் கைவசம் உள்ளது. கார்த்தியின் 'கைதி', 'சர்தார்' படங் களின் இரண்டாம் பாகங்கள் தயாராக உள்ளன. கமலின் 'தேவர் மகன்', 'வேட்டையாடு விளையாடு', விஜய்யின் 'துப்பாக்கி', செல்வராகவன் இயக்கிய 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களின் இரண்டாம் பாகங்களையும் எடுக்க உள்ளனர்.