போலீசாக கனவு...தற்போது தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர்
கோலிவுட்டின் மிகவும் பிரியமான நட்சத்திரங்களில் ஒருவராக இவர் உள்ளார்.
சென்னை,
இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து கோலிவுட்டின் மிகவும் பிரியமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறி இருக்கிறார். அவரது முதல் படமே அவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது. அப்போதிருந்து, அவர் பல வெற்றி படங்களை நமக்கு கொடுத்து வருகிறார். ஆம், நீங்கள் யூகித்தது சரிதான். அவர் வேறு யாருமல்ல சிவகார்த்திகேயன்தான்.
சிவகார்த்திகேயன் இப்போது சினிமா துறையில் ஒரு பிரபலமான நடிகராக இருந்தாலும், அவரது பயணம் சவால்கள் மற்றும் விடாமுயற்சியால் நிரம்பியுள்ளது. பொறியியல் பட்டதாரியான சிவகார்த்திகேயன், முதலில் தனது தந்தையை போல ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவில் இருந்திருக்கிறார்.
பின்னர் தனது தந்தையை இழந்த சிவகார்த்திகேயன், குடும்பத்திற்காக தனது வாழ்க்கைப் பாதையை மாற்றினார். கல்லூரியில் படிக்கும்போது அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதுதான் அவர் தன்னிடம் உள்ள திறமையைக் கண்டுபிடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி கராத்தேவிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ள அவரது பயணம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. அவர், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, டாக்டர், டான் உள்ளிட்ட வெற்றிப்படங்களை நமக்கு கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.