கருங்காலி மாலையில் நம்பிக்கை இல்லை - லோகேஷ் கனகராஜ்


கருங்காலி மாலையில் நம்பிக்கை இல்லை - லோகேஷ் கனகராஜ்
x

தன் நண்பன் ஆசையாய் வாங்கிக் கொடுத்தார் என்பதற்காகவே இந்த கருங்காலி மாலை அணிந்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

சென்னை,

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் வரிகளில், சுருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "இனிமேல்" ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரம் எடுத்துள்ள பாடல்தான் 'இனிமேல்'. இதில் சுருதிஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். லோகேஷ்,சுருதியின் ரொமான்ஸ்க்காகவே பாடல் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. இந்தப் பாடல் நேற்று மாலை வெளியான நிலையில் இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் பாடல் தொடர்பாக இருவரிடமும் உரையாடல் நடைபெற்றது. அதில் லோகேஷ் கனகராஜ் நீண்ட நாட்களாக கருங்காலி மாலை அணிந்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. ஏனெனில், இவர் கருங்காலி மாலை அணிந்திருப்பதால் அதை கவனித்து, இந்த மாலையால் என்னென்ன நன்மைகள் எனப் பல யூடியூப் சேனல்கள் வீடியோ வெளியிட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த கேள்விக்கு அவர், "ஒரு உண்மையைச் சொல்லி விடுகிறேன். எந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்த மாலையை நான் அணியவில்லை. 'விக்ரம்' படப்பிடிப்பு சமயத்தில் இருந்துதான் இதை நான் அணிந்து வருகிறேன். ஒருமுறை படப்பிடிப்பு முடித்துவிட்டு திரும்பும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் மாட்டிவிட்டேன். நல்லபடியாக, பெரிதாக எந்த சேதமும் இல்லை.

இதைப் பார்த்துவிட்டு, என்னுடைய நண்பர், கலை இயக்குநர் சதீஷ்தான் இந்த மாலை வாங்கிக் கொடுத்தார். இதை அணிந்து கொண்டால் என்னைச் சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டி குறையும் என்று சொன்னார். அவர் ஆசையாக வாங்கிக் கொடுத்தது என்பதால், மறுக்க முடியாமல் அணிந்திருக்கிறேன். மற்றபடி நம்பிக்கை எதுவும் இல்லை" என்றார்.


Next Story