மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர்... பாடகி பவதாரிணியின் திரைப்பயணம் - ஓர் பார்வை


மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர்... பாடகி பவதாரிணியின் திரைப்பயணம் - ஓர் பார்வை
x
தினத்தந்தி 26 Jan 2024 4:37 AM GMT (Updated: 26 Jan 2024 5:44 AM GMT)

பின்னணி பாடகி பவதாரிணி (வயது 47) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி (வயது 47) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த 1984ம் ஆண்டு பிறந்த இவர் இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான இவர் பாடிய பல பாடல்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன. இவர் பாடிய பாடலை கேட்கும் போதே இது பவதாரிணி பாடிய பாடல்தான் என ரசிகர்கள் உடனே கண்டுபிடித்துவிடும் அளவிற்கு ஒரு தனித்துவமான குரல் வளத்தை கொண்டவர்.

இளையராஜாவுடன் பவதாரிணி

இவர் கடந்த 1984ம் ஆண்டு வெளியான 'மை டியர் குட்டி சாத்தான்' படத்தின் மூலம் பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு ராசய்யா படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா' பாடல் இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது. அதன்பிறகு அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் தற்போது வரை ரசிகர்கள் பலரின் பிளேலிஸ்டில் இடம்பெற்றுள்ளன.

2000ம் ஆண்டு வெளியான பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில்போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. அழகி படத்தில் 'ஒளியிலே தெரிவது தேவதையா', பிரண்ட்ஸ் படத்தில் 'தென்றல் வரும் வழியை', தாமிரபரணி படத்தில் 'தாலியே தேவையில்ல', அனேகன் படத்தில் 'ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி', மாநாடு படத்தில் 'மெகர்சைலா' பாடல்கள் இவரின் திரைப்பயணத்தில் முக்கியமான பாடல்களாகும்.

30க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ள இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் நடிகை ரேவதி இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான 'மித்ர் மை பிரண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான மாயநதி என்ற தமிழ் படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இப்படி பல்வேறு மென்மையான பாடல்களை பாடி தனது காந்த குரலால் ரசிகர்களை கவர்ந்த பவதாரிணி சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலமானார். அவரின் உடல் இன்று மாலை சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

பவதாரிணியின் மனதை மயக்கும் மென்மையான குரல் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் நிலைத்து இருக்கும்.


Next Story