லாபம் தரும் பேய் படங்கள்


லாபம் தரும் பேய் படங்கள்
x

தமிழ் சினிமாவில் அண்ணன் - தங்கை பாசம், அம்மா - மகன் பாசம், காதல், குடும்ப செண்டிமெண்ட் என்று எத்தனையோ கதை அம்சங்கள் கொண்ட படங்கள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. இந்த கதைப் பட்டியலில் பேய் படங்கள் கணிசமான அளவு இடம் பெற்றுள்ளதோடு, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என பலதரப்பினருக்கும் லாபத்தை அள்ளித் தந்துள்ளது.

ஒவ்வொரு காலகட்டங்களிலுமே பேய் படங்கள் வந்துள்ளன. தமிழ் சினிமாவில் பேய் பட கலாசாரத்தை ஆரம்பித்து வைத்த பெருமை பழம் பெரும் இயக்குனர் விட்டலாச்சாரியாருக்கே உண்டு. டெக்னாலஜி அதிகம் இல்லாத காலகட்டத்திலேயே ஆங்கில படங்களுக்கு நிகராக `ஜகன் மோகினி', `மாய மோதிரம்' போன்ற படங்களை எடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து `மைடியர் லிசா', `ஜென்ம நட்சத்திரம்', `வா அருகில் வா', `உருவம்', `நாளைய மனிதன்' உட்பட ஏராளமான திகில் படங்கள் வந்தன.

பேய் படங்களின் இரண்டாவது இன்னிங்சை `சந்திரமுகி' தொடங்கி வைத்தது. காதல், காமெடி, திகில் கலந்த அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்ததோடு, தமிழ் சினிமாவின் 'டிரெண்ட் செட்டிங்' படமாகவும் அமைந்தது.

'சந்திரமுகி' படத்துக்கு பிறகு சிரிப்பு பேய் படங்கள், குழந்தைகளுக்கான பேய் படங்கள் என வகை வகையாக அணிவகுத்து சினிமாக்காரர்களுக்கு பண மழையை பொழிந்தது.

சிறு முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதால் பல இயக்குனர்கள், பெரிய நடிகர்கள் பக்கம் செல்லாமல் பேய்க் கதைகள் பக்கம் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்போது பல கமர்ஷியல் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களும் பேய் கதையை இயக்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். பேய் கதைகள் இயக்குனர்களுக்கு தோல்வி தராத அளவுக்கு கை கொடுத்து உதவுகிறது.

கடந்த சில வருடங்களாக மற்ற கதை அம்சங்கள் உள்ள படங்களுக்கு நிகராக பேய் படங்கள் அதிகமாக வந்ததோடு அந்தப் படங்கள் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்குமளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளது.

பேய் படங்களில் நடிக்க முன்னணி நடிகர்களும் தயக்கம் காட்டுவதில்லை. நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, தமன்னா, ஆண்ட்ரியா, அனுஷ்கா, லட்சுமி ராய் என்று பல நடிகைகள் பேய் படங்களில் நடித்துள்ளனர்.

`டார்லிங்', `தேவி', `காஞ்சனா', `பிசாசு', `அரண்மனை', `யாமிருக்க பயமேன்', `தில்லுக்கு துட்டு', `டிமாண்டி காலனி', `ஐரா', `காட்டேரி', `டைரி', `மிரள்', `ஓ மை கோஸ்ட்' உட்பட கடந்த சில வருடங்களில் வெளியான பேய் படங்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதில் காஞ்சனா, அரண்மனை, பிசாசு போன்ற படங்கள் பல பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.

சில நடிகர்கள் பேய் கதைகள் வேண்டவே வேண்டாம் என்று சொல்லி ஓடி ஒளியுமளவுக்கு பேய் கதைகள் அவர்களை துரத்திய சுவாரஸ்யமான சம்பவங்களும் உண்டு.

ஆனாலும் தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் பேய் படங்கள் எடுப்பது குறைந்த மாதிரி தெரியவில்லை.

லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2, ஆன்ட்ரியாவின் பிசாசு-2, அருள்நிதியின் டிமாண்டி காலனி -2, சுந்தர்.சியின் அரண்மனை-4 உட்பட ஏராளமான பேய் படங்கள் உருவாகி வருகிறது.


Next Story