லாபம் தரும் சரித்திர படங்கள்


லாபம் தரும் சரித்திர படங்கள்
x

ஹாலிவுட் சினிமாவுக்கு சயின்ஸ் பிக்‌ஷன் படங்கள் அவ்வப்போது வெற்றிக்கு கைக் கொடுக்கிறது என்றால், நம்ம ஊர் சினிமாவுக்கு புராணம், புதினம் கலந்த வரலாற்று படங்கள், பக்தி படங்கள் நல்ல வசூலை அள்ளிக் கொடுக்கின்றன.

தமிழ் சினிமாவின் தொடக்க காலத்திலேயே புராணம், புதினங்களை அடிப்படையாக கொண்ட பல வரலாற்று படங்கள் வெளிவந்ததோடு, பெரும் வெற்றியும் அடைந்தது. அவற்றில் `ராஜராஜ சோழன்', `கர்ணன்' உட்பட பல படங்கள் தமிழ் மன்னர் களின் பெருமை பேசும் படங்களாக வெளியானது.

`2 கே கிட்ஸ்' களுக்கு பண்டைய நாகரிகம், கலாசாரத்தை எடுத்துச் சொல்லும் விதமாக `பாகுபலி', `ஆர் ஆர் ஆர்', `பிரம்மாஸ்திரம்', `பொன்னியின் செல்வன்', `மரைக்காயர்' என்று நிறைய படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

வரலாற்று கதைகள் என்று வரும்போது அதில் லாபத்துக்கான உத்தரவாதம் இருக்கிறது என்கின்றனர் வினியோகஸ்தர்கள். கதையும் களமும் கதாபாத்திரங்களும் வித்தியாசமாக இருப்பதால் மக்களும் வரலாற்று கதைகளை விரும்பி பார்க்கிறார்கள்.

இதற்கு `பொன்னியின் செல்வன்' படம் முக்கிய உதாரணம். தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் வழக்கத்தை முற்றிலும் மறந்திருந்த பல பெரியோர்கள், குடும்ப தலைவிகள் உள்பட பலதரப்பினரை அந்த படம் திரையரங்குகளுக்கு இழுத்து வந்தது. இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இந்த படத்தை விரும்பி பார்த்தது, திரைத்துறையினருக்கு ஆச்சரியம் கலந்த வியப்பை அளித்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட இந்திய மொழிகளில் சரித்திர, புராண கதைகளை மையமாகக் கொண்டு ஏராளமான படங்கள் வெளிவந்து, வெற்றியடைந்துள்ளது. அப்படி வெளிவந்த படங்கள் மாஸ் ஹீரோ நடித்த படங்களை விட பெரிய வரவேற்பையும், பெரிய வசூலையும் பெற்றிருக்கிறது.

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த `பாகுபலி' படம் ராஜாக்கள் காலத்தில் நடக்கும் ஒரு கதையாக உருவாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அதே மாதிரியான படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு சரித்திர கதையை மையமாக வைத்து ரஜினி `கோச்சடையான்' என்ற கிராபிக்ஸ் படத்திலும், கமல் `ஹேராம்' படத்திலும், ஆர்யா `மதராஸபட்டிணம்' படத்திலும், சித்தார்த் `காவியத் தலைவன்' படத்திலும், சினேகா `பொன்னர் சங்கர்' படத்திலும் நடித்து இருந்தனர். தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வந்த `சைரா நரசிம்மா ரெட்டி' பால கிருஷ்ணா நடிப்பில் உருவான `கவுதமிபுத்ரா சதகர்ணி' படங்களும் சரித்திர கதைகளாக வந்தன.

மலையாளத்தில் மம்முட்டி `பழஸி ராஜா' படத்திலும், மோகன்லால் `மரைக்காயர்' படத்திலும் நடித்திருந்தார்கள். ஷாருக்கான் `அசோகா' படத்திலும், கங்கனா ரனாவத் `மணிகர்மா' படத்திலும் நடித்தார்கள். இந்த படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தது.

`பொன்னியின் செல்வன்' 2-ம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள். சமந்தா நடிப்பில் தயாராகி உள்ள துஷ்யந்தன், சகுந்தலை வாழ்க்கை கதையான `சாகுந்தலம்' மற்றும் `அனுமன்' உள்ளிட்ட புராண வரலாற்று படங்கள் பல அடுத் தடுத்து திரைக்கு வர உள்ளன.

விக்ரம் `தங்கலான்' என்ற வரலாற்று கற்பனைக் கதையில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசனின் `மருதநாயகம்' படத்தை உருவாக்கும் திட்டமும் உள்ளது. சுந்தர். சி இயக்கத்தில் `சங்கமித்ரா' சரித்திர படமும் தயாராக உள்ளது.

சினிமா புரட்சி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் நம்மூர் இயக்குனர்கள் மண் சார்ந்த வரலாற்று கதைகள் மூலம் உலக சினிமா பார்வையாளர்களை கவர்ந்து வருவது பெருமையான விஷயம்.


Next Story