கிராமத்து கதைகளை விரும்பும் சசிகுமார்
கிராமத்து கதைகளிலேயே அதிகம் நடிப்பது குறித்து சசிகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சசிகுமார் நடிப்பில் 'நான் மிருகமாய் மாற' படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அடுத்து ஹேமந்த் இயக்கத்தில் நடித்துள்ள 'காரி' படம் வெளியாக இருக்கிறது. கிராமத்து கதைகளிலேயே அதிகம் நடிப்பது குறித்து சசிகுமார் கூறும்போது, ''ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்று பேசுகின்றனர். நான் கிராமத்து படங்களில்தான் நடிப்பேன். கிராமத்து மக்களுக்கான படங்களில் நான் நடிக்காமல் வேறு யார் நடிப்பார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்பினேன். அது நடக்கவில்லை. இப்போது அந்த ஆசை லட்சுமண்குமார் தயாரித்த காரி படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. இது மக்களுக்காக எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு படம். அடுத்த வருடம் மீண்டும் படம் இயக்க முடிவு செய்து இருக்கிறேன். ஜல்லிக்கட்டு மீது தடை கேட்டு எத்தனை வழக்கு போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டை அழிக்க முடியாது. ஒரு படத்தில் நடித்தபோது சாப்பாடு சரியில்லை, இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் என் சம்பளத்தில் கூட கொஞ்சம் பிடித்துக்கொண்டு அதற்கு பதிலாக நல்ல சாப்பாடு போடுங்கள் என்று கூறினேன். அவர் நல்ல சாப்பாடும் போடவில்லை. என்னுடைய சம்பளத்தையும் கொடுக்கவில்லை" என்றார்.