படப்பிடிப்பில் விபத்து: பிரபல நடிகை காயம்


படப்பிடிப்பில் விபத்து: பிரபல நடிகை காயம்
x

நடிகை சம்யுக்தா ஹெக்டே ஒரு கன்னட படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பில் உயரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார்.

தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக வாட்ச்மேன் படத்தில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. தொடர்ந்து ஜெயம் ரவியின் கோமாளி, பப்பி, மன்மத லீலை படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது அபிஷேக் பசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிரடி சண்டை காட்சிகள் உள்ளன. ஏற்கனவே சில சண்டை காட்சிகளை படமாக்கி முடித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்னொரு சண்டை காட்சியை பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டூடியோவில் படமாக்கி வந்தனர். அப்போது விபத்து ஏற்பட்டு சம்யுக்தா ஹெக்டே உயரத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டது. வலியால் துடித்தார்.

படக்குழுவினர் சம்யுக்தா ஹெக்டேவை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சம்யுக்தா ஹெக்டே காலில் கட்டுப் போட்டுள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகிறது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


Next Story