சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான சிவகார்த்திகேயன் படம்...!


சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான சிவகார்த்திகேயன் படம்...!
x

இந்த விழாவில் திரையிடலுக்கு தேர்வாகி உள்ள முதல் தமிழ் படம் என்ற பெருமையை 'கொட்டுக்காளி' பெற்றுள்ளது.

சென்னை,

'கூழாங்கல்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'கொட்டுக்காளி'. இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக திரையிடலுக்கு 'கொட்டுக்காளி' திரைப்படம் தேர்வாகி உள்ளது. இந்த விழாவில் பிரத்யேக திரையிடலுக்கு தேர்வாகி உள்ள முதல் தமிழ் படம் என்ற பெருமையை 'கொட்டுக்காளி' பெற்றுள்ளது.

இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், "நமது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுங்கான பிரிவில் தேர்வாகி உள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

இத்திரைப்படத்தை உலகத் தரத்தில் இயக்கியுள்ள இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் நடித்துள்ள சூரி அண்ணன், அன்னாபென் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பும், மகிழ்ச்சியும், பாராட்டுக்களும். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்தியேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ்த்திரைப்படம் நமது "கொட்டுக்காளி" என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

இது போன்ற ஒரு பெருமைக்குரிய படைப்பை தயாரிக்க உத்வேகம் அளித்து அதை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லவும் ஊக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கும் எனது அன்பிற்குரிய ரசிகர்களாகிய உங்களுக்கே அனைத்து பெருமையும் சேரும்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story