இந்தி பட உலகில் மின்னும் தென்னிந்திய நடிகைகள்


இந்தி பட உலகில் மின்னும் தென்னிந்திய நடிகைகள்
x

இந்திய சினிமாவில் `பாகுபலி', `ஆர்.ஆர்.ஆர்', `காந்தாரா', `பொன்னியின் செல்வன்', `புஷ்பா', `கே.ஜி.எப்.' என்று தென்னிந்திய படங்கள் ஆளுமை செலுத்தத் தொடங்கி உள்ளன. அதோடு இந்தி பட உலகை தென்னிந்திய நடிகைகள் ஆளும் நிலைமையும் உருவாகி இருக்கிறது. ஒரு காலத்தில் ஹீரோயின்கள் வேண்டுமென்றால் வட இந்தியாவை பார்த்தார்கள். இப்போது நயன்தாரா, சுருதிஹாசன் ராஷ்மிகா மந்தனா, சமந்தா, அமலாபால் உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகள் இந்தி பட உலகை கலக்குகிறார்கள்.

நயன்தாரா

நயன்தாரா சமீப காலத்தில் பெரிய சூப்பர்ஹிட் படங்களை கொடுக்காத போதிலும் அவரது `கிரேஸ்' மட்டும் குறையவே இல்லை. விஜயசாந்திக்கு பிறகு `லேடி சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை தன்வசப்படுத்தி தென்னிந்திய பட உலகில் `நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மூலம் தனித்திறமை காட்டி வருகிறார். அடுத்து ஷாருக்கான் ஜோடியாக `ஜவான்' படத்தின் மூலம் இந்திக்கு போய் உள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

இரண்டு கன்னட படங்களுக்குப் பிறகு தெலுங்கில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன்பிறகு தமிழ், இந்தி படங்களில் நடித்து நல்ல மார்க்கெட்டில் இருக்கிறார். `புஷ்பா' படத்தின் மூலம் `நேஷனல் கிரஷ்' ஆக மாறிவிட்டார். தமிழில் விஜய்யின் `வாரிசு' படத்தில் நடித்தார். தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்தியில் தற்போது இரண்டு படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

சமந்தா

நடிப்பு திறமையால் தெலுங்கு, தமிழ், கன்னட ரசிகர் களின் இதயத்தை கொள்ளையடித்த சமந்தா தென்னிந்தியாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து விட்டார். `தி பேமிலி மேன்' இந்தி வெப் தொடர் அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி இந்திய அளவில் பிரபல நடிகையாக அவரை உயர்த்தியது. சமந்தாவுக்கு அனைத்து மொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன. இந்தி படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். `சிட்டாடல்' என்ற இந்தி வெப் தொடரிலும் நடிக்கிறார்.

அமலாபால்

தமிழ், தெலுங்கில் கதாநாயகியாக உயர்ந்துள்ள அமலாபால் `போலா' படம் மூலம் இந்திக்கு போய் உள்ளார். தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

மும்பையில் இருந்து வந்து தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து தமிழ்நாட்டின் மருமகளாகி போன ஜோதிகாவும் இப்போது இந்தியில் நடிக்க போய் உள்ளார்.

சுருதி ஹாசன்

கமல்ஹாசன் மகளாக சினிமா துறையில் சுருதிஹாசன் அறிமுகமான போதிலும் தனது சொந்த திறமையால் மிகக் குறைந்த காலத்திலேயே `டாப்' ஹீரோயினாக வளர்ந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இந்திய சினிமாவில் தனக்கென்று தனி முத்திரையை பதித்துக் கொண்டார். இப்போது நாடு முழுவதும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பான்- இந்தியா படமான பிரபாஸின் `சலார்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.


Next Story