போகிற போக்கில் நடிகைகளை கீழ்த்தரமாக பேசுவதா? - மன்சூர் அலிகான் கண்டனம்


போகிற போக்கில் நடிகைகளை கீழ்த்தரமாக பேசுவதா? - மன்சூர் அலிகான் கண்டனம்
x

நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

நடிகை திரிஷா 96 படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன், ரோட், லியோ ஆகிய படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏ.வி. ராஜு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவின் ஆதரவாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து வெளியேறியதும், ஆட்சியைக் காப்பாற்ற தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சசிகலா 10 நாள்கள் கூவத்தூரில் உள்ள பிரபல ரிசார்ட்டில் தங்க வைத்தார்.

அதைக் குறிப்பிட்டு பேசிய ராஜு, "கூவத்தூரில் எத்தனை நடிகைகளைக் கூட்டி வந்தார்கள் தெரியுமா? அதில் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் பிரபல நடிகை தான் வேண்டும் என அடம்பிடித்தார். அதனால், நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஒருவர் ரூ.25 லட்சம் கொடுத்து அந்த நடிகையை கூவத்தூருக்கு அழைத்து வந்தார். இன்னும் நிறைய நடிகைகள் வந்தார்கள் எனக் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டு திரிஷா ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், எக்ஸ் தளத்தில் திரிஷாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் செல்லக்கூடிய கேவலமான மனிதர்களைத் திரும்ப திரும்ப பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இதற்காக, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனி செய்ய வேண்டியதையும் சொல்ல வேண்டியதையும் என் சட்டப்பிரிவினர் பார்த்துக்கொள்வார்கள் எனக் கூறியுள்ளார்.

இந்தநிலையில், கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புப்படுத்தி அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேவலமான, அருவருகத்த்தக்க வகையில் திரைத்துறை சகோதரிகளை அரசியல் போர்வையில் ஒருவர் விமர்சித்தது மனதை நோகச்செய்கிறது. போகிற போக்கில் நடிகைகளை கீழ்த்தரமாக பேசியது கண்டனத்திற்குரியது. இது சமூகத்தை பாதிக்கும் செயல். நடிகைகள் குறித்து அவதூறு பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் மன்சூர் அலிகான் வலியுறுத்தி உள்ளார்.

நடிகை திரிஷா சர்ச்சை கருத்து கூறியிருந்த மன்சூர் அலிகான் தற்போது அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story