'தளபதி 67' அப்டேட் எப்போது? லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்...


தளபதி 67 அப்டேட் எப்போது? லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்...
x

கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோவை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இவர்களது கூட்டணியில் வந்த 'மாஸ்டர்' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பெயரிடப்படாத இந்த படம் 'தளபதி 67' என்ற அடையாளத்தில் தற்போது உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அப்டேட்களை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவரிடம், தளபதி 67 குறித்து அப்டேட் வழங்குமாறு அங்குள்ள மாணவர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், "தளபதி 67 குறித்து ஒரு முக்கிய குறிப்பு மட்டும் தருகிறேன், பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளை குறித்து வைத்து கொள்ளுங்கள்" என்று கூறினார். தனியார் கல்லூரி நிகழ்வில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
Next Story