வசூலில் ரூ.100 கோடியை நெருங்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம்


வசூலில் ரூ.100 கோடியை நெருங்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம்
x

சர்ச்சைக்கு இடையே தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இரண்டாவது வார இறுதிக்குள் எளிதில் ரூ.100 கோடி வசூலிக்கும் என கூறப்படுகிறது.

புனே,

மேற்கு வங்காள இயக்குநரான சுதீப்தோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்த படத்தின் டிரைலர் காட்சியில், கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்சிகள் அமைந்திருந்தது. இது பல்வேறு தரப்பிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தொடங்கியது.

3 பெண்களின் உண்மை கதைகள் அடிப்படையில் படம் உருவாகி உள்ளது என கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் மோசடி செய்து, பின்னர் கர்ப்பமடைய செய்து, அதன்பின் ஈராக் மற்றும் சிரியாவுக்கு நாடு கடத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைய செய்த விவரங்களை படம் உள்ளடக்கி உள்ளது. இந்த படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களையேற்று நடித்து உள்ளனர்.

இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த படம் கடந்த 5-ந்தேதி வெளியானது. நாட்டில் வெறுப்பை பரப்பும் நோக்கோடு படம் அமைந்து உள்ளது என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழக திரையரங்குகளில் படம் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரத்தில் கேரளாவிலும் கூட பல திரையரங்குகளில் படம் வெளியிடுவதற்கு, திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். மேற்கு வங்காளத்தில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார். உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் படத்திற்கு வரி விலக்கு அறிவித்து உள்ளார்.

ஆனால், இந்த சலசலப்பை எல்லாம் படம் முறியடித்து, வசூலில் முன்னேறி கொண்டிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. படம், தொடக்க நாளில் ரூ.8.03 கோடியும், அடுத்த நாள் ரூ.11.22 கோடியும் வசூலித்து இருந்தது. 3-வது நாளான ஞாயிற்று கிழமை, பாக்ஸ் ஆபீசில் ரூ.16 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது. இதனால், முதல் வார இறுதியில் பட வசூல் மொத்தம் ரூ.35.25 கோடியாக உள்ளது.

இந்த வாரத்தில் பெரிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லாத சூழலில், படம் பற்றிய பேச்சும் பரவி வரும் சூழலில், தி கேரளா ஸ்டோரி படம் இந்த வாரம் முழுவதும் வசூலை குவிக்கும் என பார்க்கப்படுகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் ரூ.8.05 கோடி என்ற அளவில் வசூல் தொடங்கியது. அதன்பின்னர், தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

படத்தின் மொத்த வசூல், ரூ.93.37 கோடியாக உள்ளது. ரூ.100 கோடியை எட்டுவதற்கு இன்னும் ரூ.7 கோடியே மீதம் உள்ளது. இரண்டாவது வார இறுதி வருவதற்குள் எளிதில் தி கேரளா ஸ்டோரி படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story