தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள் 3 பேர் கைது

சல்மான்கான் நடித்துள்ள டைகர் 3 திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது.
மும்பை,
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்துள்ள டைகர் 3 திரைப்படம் கடந்த 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.
இதனிடையே, கடந்த 12ம் தேதி மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மல்லிகான் நகரில் உள்ள தியேட்டரில் டைகர் 3 திரைப்படம் திரையிடப்பட்டது. காலை 9-12 மணி காட்சியின் போது ரசிகர்கள் தியேட்டரில் திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சில ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்தனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள் 3 பேரை நாசிக் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ஜாவித் கான், பஜ்ரூம் ஷேக் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.