தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விக்னேஷ் சிவன், நயன்தாரா சந்திப்பு
ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
சென்னை,
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், திருமண இடத்தை இடம் மாற்றி வைத்தனர். இதன்படி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் இன்று நேரில் சந்தித்தனர். அப்போது நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் தங்களின் திருமணத்திற்கு வருகை தருமாறு முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.