ஆந்திரா, தெலுங்கானாவில் விஜய், அஜித் படங்களுக்கு அதிக தியேட்டர் கிடைக்குமா?
ஆந்திரா, தெலுங்கானாவில் விஜய், அஜித் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் நடிகர் ராணாவின் தந்தையுமான சுரேஷ்பாபு தெரிவித்து உள்ளார்.
விஜய்யின் 'வாரிசு', அஜித்குமாரின் 'துணிவு' ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இந்த படங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக தியேட்டர்கள் ஒதுக்க கூடாது என்றும் நேரடி தெலுங்கு படங்களை மட்டுமே கூடுதல் தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்றும் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தமிழ் திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் நடிகர் ராணாவின் தந்தையுமான சுரேஷ்பாபு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது., ''பொங்கல் பண்டிகையில் விஜய், அஜித் படங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் அதிக தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. சினிமா மொழி, எல்லைகளை கடந்துள்ளது. புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் தெலுங்கு படங்களுக்கு தமிழகத்தில் அதிக தியேட்டர்கள் தந்தனர். அது அவர்களின் பெருந்தன்மை. அதுபோல் விஜய், அஜித் படங்களுக்கும் ஆந்திராவில் அதிக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும். அவதார் 2 படம் பொங்கலுக்கு வந்தால் தியேட்டர் ஒதுக்க மறுப்பீர்களா? விஜய், அஜித் படங்களுக்கு தியேட்டர் கொடுத்தால்தான் நமது தெலுங்கு படங்களுக்கு தமிழ்நாட்டில் தியேட்டர் கொடுப்பார்கள். இந்த பிரச்சினையில் சுமுக முடிவு எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.