சமுதாயம் ஏற்படுத்தும் தடைகளைத் தாண்டித்தான் பெண்கள் முன்னேறி வருகின்றனர் - நடிகர் சூர்யா


சமுதாயம் ஏற்படுத்தும் தடைகளைத் தாண்டித்தான் பெண்கள் முன்னேறி வருகின்றனர் - நடிகர் சூர்யா
x

மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமான கண்டுபிடிப்புகளைப் பெண்கள் மட்டுமே அதிகளவில் உருவாக்குவதாக ஆய்வறிக்கை கூறுகிறது என்று நடிகர் சூர்யா கூறினார்.

சென்னை,

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் EMPOW HER - 2024 சர்வதேச கருத்தரங்கு இன்று தொடங்கியது. பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று, இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கை நடிகர் சூர்யா தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய நடிகர் சூர்யா, " அகரம் சார்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய (STEM) குறித்து கருத்தரங்கம் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அகரம் ஆரம்பித்து 15 வருடங்களில் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்துள்ளனர். சிலர் படித்து வருகின்றனர். அதில், 70 சதவீதம் பேர் பெண்கள். 15 வருடங்களாக இது தொடர்ந்து வருகிறது.

உலகளவில் பல்வேறு கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததது, கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்களித்தது பெண்கள்தான். ஏராளமான கண்டுபிடிப்புகளில் பெண்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது. ஆனால், வழக்கம்போல் அவற்றில் ஆண்கள் மட்டுமே கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டுப் பேசப்படுகின்றனர்.

என்னைச் சுற்றி உள்ள பெண்களை சக்தி வாய்ந்தவர்களாகப் பார்த்துள்ளேன். பெண்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அதிகளவில் படிக்கும் பெண்கள் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல், வேலைக்கு அனுப்பாமல், குழந்தை பிறப்பு உள்ளிட்ட மேற்கொண்டு தொடர விடாமல் சமுதாயம் பல வழிகளில் தடுக்கிறது. இப்படி சமுதாயம் ஏற்படுத்தும் தடைகளையெல்லாம் தகர்த்துத்தான் பெண்கள் முன்னேறி வருகின்றனர்.

உடல் வலிமை கொண்ட விளையாட்டுகளில் கூட பெண்கள் தான் உயரத்துக்குக் கொண்டு செல்கின்றனர். வணிக ரீதியாக மட்டும் இல்லாமல் மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமான கண்டுபிடிப்புகளைப் பெண்கள் மட்டுமே அதிகளவில் உருவாக்குவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்திரா நூயி புத்தகத்தை வாங்கி படியுங்கள். பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது" என தெரிவித்தார்.



Next Story