மக்கள் பேசும் விதத்தை உங்களால் மாற்ற முடியாது; நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் - அனன்யா பாண்டே


மக்கள் பேசும் விதத்தை உங்களால் மாற்ற முடியாது; நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் - அனன்யா பாண்டே
x

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மக்களின் கருத்துக்கள் மாறுவதைப் போல் நான் உணர்கிறேன் என்று அனன்யா பாண்டே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நடிகர் சங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே 2019-ம் ஆண்டு வெளியான 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்ததாலும் தனது கருத்துகளுக்காகவும் அனன்யா அடிக்கடி, நெட்டிசன்களால் விமர்சிக்கப்படுவதுண்டு.

இந்த நிலையில் அனன்யா பாண்டே நடிப்பில் 'கோ கயே ஹம் கஹான்' என்ற திரைப்படம் கடந்த டிசம்பர் 26-ந்தேதி நெட்பிளிக்சில் வெளியானது. அர்ஜூன் வரைன் சிங் இயக்கியிருந்த இந்த படத்தில் சித்தாந்த் சதுர்வேதி மற்றும் ஆதர்ஷ் கவுரவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் அனன்யாவின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் அனன்யா பாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த படத்தில் எனது கதாபாத்திரத்துடன் மக்கள் இணைந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. சித்தாந்த் சதுர்வேதி, ஆதர்ஷ் கவுரவ் ஆகியோருடன் நடித்த இந்த படம் எனக்கு கிடைத்த சிறந்த அனுபவங்களில் ஒன்று. இந்த படத்தின் கதை இளைஞர்களிடம் சமூக ஊடகங்களின் தாக்கத்தை படம்பிடித்துள்ளது.

நான் நடிகையானதில் இருந்து அனுபவித்தவை அனைத்தும் எனது வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது. நான் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், என்னால் குறிப்பிட்ட வழியில் செயல்பட முடியாது. அதனால் என்ன நடந்தாலும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்; ஏனென்றால் என் வேலையின் மூலம் என்னை வெளிப்படுத்த எனக்கு அனுமதி கிடைத்தது. மேலும், சில விமர்சனங்கள் உண்மையில் உதவிகரமாகவும் முக்கியமான விமர்சனமாகவும் இருக்கும். கண்டிப்பாக நீங்கள் அறிவில்லாத டிரோல்களைத் தடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மக்களின் கருத்துகள் மாறுவதைப் போல் நான் உணர்கிறேன். புகழ்ச்சி அல்லது வெறுப்பு இரண்டையும் நீங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், அதுதான் உங்களால் முடியும். மக்கள் பேசும் விதத்தை உங்களால் மாற்ற முடியாது. நீங்கள் உங்களுக்குள் மட்டுமே செயல்பட முடியும். அதைத்தான் நான் கற்றுக்கொண்டேன்.

தலைமுறை தாண்டி நிற்கும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன், மக்கள் அத்தகைய கதாபாத்திரங்களை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உணர்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களை அவர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள்.

ஜோயா, ஷகுன், விக்ரம் சார் போன்ற இயக்குனர்கள் எனக்குள் ஏதோ ஒன்றைப் பார்த்து என்னுடன் பணியாற்ற விரும்புகிறார்கள் என்பது நடிகையாக எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எதையாவது கற்றுக்கொண்டு வளரக்கூடியவர்களுடன் பணியாற்றுவதே ஒரு நடிகையாக எனக்கு சிறந்த வெகுமதியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story