அஞ்சலி நடிக்கும் திகில் படம் `3டி'யில் தயாராகிறது


அஞ்சலி நடிக்கும் திகில் படம் `3டியில் தயாராகிறது
x
தினத்தந்தி 13 July 2018 4:11 PM GMT (Updated: 13 July 2018 4:11 PM GMT)

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் அஞ்சலி நடிக்கும் திகில் படம் `3டி'யில் தயாராகிறது.


தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகள் சிலர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர், அஞ்சலி. இவர், `லிசா' என்ற படுபயங்கரமான ஒரு திகில் படத்தில் நடிக்கிறார்.

கிராமத்தில் வசிக்கும் தாத்தா-பாட்டியை பார்க்க செல்லும் கதாநாயகிக்கு ஏற்படும் அனுபவங்களே படத்தின் கதை.

`ராஜா மந்திரி,' `பீச்சாங்கை,' `மதுரை வீரன்' ஆகிய படங்களை தயாரித்த ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரிக்கிறார். இவரிடம் உதவியாளராக இருந்த ராஜு விஸ்வநாத் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:

``இந்தியாவில், `ஸ்டீரியோஸ்கோப் 3டி' என்ற தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் படம், இது. இதன் அனுபவம் மிரட்டும் வகையில் இருக்கும். 3டி படங்கள் என்றாலே ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும். அதிலும் இது 3டியில் தயாராகும் திகில் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறும். அதை ஈடுகட்டும் வகையில், `லிசா' ஒரு பெரிய திகில் விருந்தாக இருக்கும்.

சாம் ஜோன்ஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபல இயக்குனர் நடிகர் மக்ரான்ட் தேஷ்பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்த சலீமா, சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். இவர்களுடன் யோகி பாபு, மைம்கோபி ஆகியோரும் நடிக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி, இசையமைக்கிறார். படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.''

Next Story