சந்திரமுகி 2: சினிமா விமர்சனம்


சந்திரமுகி 2: சினிமா விமர்சனம்
x
நடிகர்: ராகவா லாரன்ஸ் நடிகை: கங்கனா ரணாவத்  டைரக்ஷன்: பி.வாசு இசை: கீரவாணி ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது.

செல்வந்தரான ராதிகா வீட்டில் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது. அவருடைய இளைய மகள் விபத்தில் சிக்குகிறார். குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கான காரணத்தையும் பரிகாரத்தையும் கூறும்படி குடும்ப ஜோசியரிடம் ஆலோசனை கேட்கிறார் ராதிகா.

சந்திரமுகி வாழ்ந்து மறைந்த ஊரில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஜோசியர் கூறுகிறார்.

அதன்படி ராதிகாவின் குடும்பமும் காதல் திருமணத்தால் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட மூத்த மகளின் பிள்ளைகள், அவர்களின் பாதுகாவலரான ராகவா லாரன்ஸ் ஆகியோரும் குலதெய்வ கோயிலுக்கு செல்கிறார்கள். அங்கு வேட்டையன் ராஜா வாழ்ந்த வீட்டில் தற்காலிகமாக வசிக்கிறார்கள். பாழடைந்த குடும்ப கோவிலை சுத்தம் செய்யும்போது சிலர் இறந்து விடுகிறார்கள்.

அந்தக்கோவிலை சுத்தம் செய்வதற்கு சந்திரமுகி அனுமதிக்க மாட்டாள், மீறி சுத்தம் செய்தால் மரணம் நிச்சயம் என அங்கிருக்கும் சாமியார் கூறுகிறார். கோவிலில் பூஜை நடந்ததா? ஆபத்தில் இருந்து குடும்பத்தினர் தப்பினார்களா? என்பது மீதிக்கதை.

ராகவா லாரன்ஸ் துடிப்பும் துள்ளலுமாக இருக்கிறார். பாண்டியனாக அடக்கி வாசிக்கும் லாரன்ஸ், வேட்டையனாக மாறும்போது நடிப்பில் எகிறி அடித்துள்ளார். ராஜாக்களுக்குரிய நடை, உடை, வசன உச்சரிப்பு என எல்லாவற்றிலும் கவனிக்க வைக்கிறார். தன்னுடைய அடையாளமான நடனத்திலும் உற்று நோக்க வைக்கிறார்.

சந்திரமுகி கதாபாத்திரத்தில் பொன்மேனியாய் மின்னும் கங்கனா ரணாவத் நடிப்பாலும் நடனத்தாலும் கவர்கிறார். வடிவேலுவும், ரவி மரியாவும் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்துள்ளனர். வீல் சேரில் வந்து அனுதாபத்தை அள்ளிச்செல்கிறார் லஷ்மி மேனன். நடிப்பிலும் மிரட்டுகிறார்.

ராதிகா, மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா, ஓய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், விக்னேஷ், ராவ் ரமேஷ் என அனைவரும் தங்கள் கடமையை சரியாக செய்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் அரண்மனைக் காட்சிகளை மிக பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்.

கீரவாணி இசையில் பாடல்கள் புதுமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் அனுபவத்தைக்கொட்டி கதைக்கு வலு சேர்த்துள்ளார். அமானுஷ்யம், அடிதடி, நகைச்சுவை என்று பொழுதுபோக்கு அம்சங்களோடு நிறைவான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பி.வாசு. திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யங்களை சேர்த்து இருந்தால் பேசப்பட்டு இருக்கும்.


Next Story