காபி வித் காதல்: சினிமா விமர்சனம்


காபி வித் காதல்: சினிமா விமர்சனம்
x

காதல், கலகலப்புக்கு குறைவில்லாத ஜாலியான படம் காபி வித் காதல்.

ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் மூவரும் அண்ணன் தம்பிகள். வெளியூரில் வேலை பார்க்கும் ஜீவா தனது காதலி இன்னொருவனுடன் ஓடிப்போனதால் விரக்தியாகி பெற்றோருடன் வந்து தங்குகிறார். ஸ்ரீகாந்துக்கு மனைவி, குழந்தை இருக்கும் நிலையிலும் பெண்களை பார்த்து ஜொள்ளு விட்டு அலைகிறார். பெண்களுடன் ஜாலியாக சுற்றும் ஜெய்யை அவரது சிறுவயது தோழி ஒரு தலையாய் காதலிக்கிறார். ஜெய்யோ இன்னொரு பெண்ணை மணக்க விரும்புகிறார். ஒரு கட்டத்தில் குளறுபடி நடக்கிறது. ஜெய்க்கு நிச்சயமான பெண் ஜீவாவை விரும்புகிறாள். ஜெய்க்கோ பிரிந்துபோன சிறுவயது தோழி மீது காதல் வருகிறது. ஸ்ரீகாந்துடன் படுக்கையை பகிர்ந்த பெண்ணை ஜீவாவுக்கு மணப்பெண்ணாக பேசி முடிக்கின்றனர். இந்த உறவு சிக்கல் முடிச்சுகள் எவ்வாறு அவிழ்கின்றன.

ஜீவா, ஜெய் யாரை மணக்கிறார்கள் என்பது மீதி கதை. ஜீவாவுக்கு இன்னொரு தரமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அதை பிரமாதமாக செய்துள்ளார். காதலி பிரிவில் கலங்கும் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தம்பிக்கு நிச்சயமான பெண்ணுடன் ஒரு கணம் காதல் துளிர்ப்பது பிறகு அது தவறு என உணர்ந்து விலகி செல்வது அந்த பெண் தம்பியையே விரும்ப காய்கள் நகர்த்துவது என்று அவரது கதாபாத்திரத்தை மனதில் அழுத்தமாக பதிய வைக்கிறார். ஸ்ரீகாந்த் தன்னோடு படுக்கையை பகிர்ந்த பெண் தம்பிக்கு மணப்பெண்ணாக நிச்சயமானதை பார்த்து பதறுகிறார். இருவரையும் பிரிக்க செய்யும் சூழ்ச்சிகள் கலகலப்பு. ஜெய் தனக்கு திருமணம் நிச்சயமான பிறகு சிறுவயது தோழி மீதான காதலை உணர்வது ஜீவன்.

இன்னொருவனுக்கு நிச்சயமான அவளை தனது மனைவியாக்கி கொள்ள செய்யும் சில்மிஷங்கள் ரசிக்க வைக்கின்றன. சம்யுக்தா, ரைசா வில்சன், மாளவிகா சர்மா, அம்ருதா ஆகிய 4 கதாநாயகிகள். இதில் அம்ருதா, மாளவிகா சர்மாவுக்கு நடிக்க வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி உள்ளனர். பிரதாப் போத்தன் யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார். திருமண காண்டிராக்டர்களாக வரும் யோகிபாபுவும் ரெடின் கிங்ஸ்லியும் கலகலக்க வைக்கிறார்கள். கர்ப்பிணியாக வரும் திவ்யதர்ஷினி கதாபாத்திரத்தில் நிறைவு.

ஜீவாவை காதலித்து சேர்ந்து வாழும் பெண் திடீரென்று கழற்றி விட்டு இன்னொருவனுடன் ஐக்கியமாவது நெருடல். கவர்ச்சியும் தூக்கலாக உள்ளது. தான் இயக்கும் படங்கள் காதல், கலகலப்புக்கு குறைவில்லாத ஜாலியான படங்களாக ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் இருக்கும் என்பதை சுந்தர்.சி மீண்டும் இதில் நிரூபித்து உள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.

1 More update

Next Story