சினிமா விமர்சனம்: ருத்ரன்


சினிமா விமர்சனம்: ருத்ரன்
x
நடிகர்: ராகவா லாரன்ஸ் நடிகை: பிரியா பவானி சங்கர்  டைரக்ஷன்: கதிரேசன் இசை: சாம் சி.எஸ் ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்

தன் குடும்பத்தை கொன்றவரை பாதிக்கப்பட்டவர் எப்படி பழிவாங்குகிறார் என்பது குறித்த கதை.

டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் நாசர், பூர்ணிமா தம்பதியின் மகன் லாரன்ஸ். இவருக்கும், ஆதரவற்ற பிரியா பவானி சங்கருக்கும் காதல் மலர்கிறது. டிராவல்ஸ் நிறுவனத்தை விரிவுபடுத்த நாசர் ஆறு கோடி ரூபாய் வட்டிக்கு கடன் வாங்குகிறார். அந்த பணத்தை தனது தொழில் பங்குதாரர் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட அதிர்ச்சியில் நாசர் இறந்து போகிறார். பிரியா பவானி சங்கரை திருமணம் செய்த கையோடு கடனை அடைக்க வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார் லாரன்ஸ்.

அதன் பிறகு அவரது குடும்பத்தில் பேரிழப்புகள் நடக்கின்றன. அலறியடுத்து சென்னைக்கு வரும் லாரன்ஸ் குடும்பத்தை சிதைத்தவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பது மீதி கதை.

லாரன்ஸ் பெற்றோரிடம் காதல், அம்மா பாசம், பழிவாங்கல் என்று பன்முகம் காட்டும் கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார். பாடல் காட்சிகளில் அவர் ஆடும் புயல்வேக நடனத்தில் தியேட்டரில் கைதட்டல் கேட்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் ஓவர் டோஸ் என்று சொல்லும் அளவுக்கு சற்று அதிகமாகவே பாய்ந்து இருக்கிறார். கிளைமாக்ஸ் அதிரடி ஹாலிவுட் மிரட்சியை தருகிறது. சண்டையில் லாரன்ஸ் காட்டும் ஸ்டைலும் ரசிக்க வைக்கிறது.

பூமி கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். சாதாரண கைதியாக இருக்கும் அவர் தொழில் கற்றுக்கொடுத்தவனையே போட்டுத்தள்ளி படிப்படியாக கொடூர வில்லனாக மாறி மிரள வைக்கிறார். சரத்குமாரின் மிடுக்கான தோற்றமும் வில்லத்தனத்துக்கு கைகொடுக்கிறது.

பிரியா பவானி சங்கருக்கு முதல் பாதியில் அதிக வேலை இல்லை. இரண்டாம் பாதியில் கதையின் முக்கிய அங்கமாக மாறி முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

நாசர், பூர்ணிமா இருவரும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இளவரசு, காளி வெங்கட் ஆகியோர் அவரவரின் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர். ரெடின் கிங்ஸ்லி சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார்

சில காட்சிகளை முன்கூட்டியே யூகிக்க முடிவது பலகீனம்.

ராகவா லாரன்ஸ்ஜி.வி.பிரகாஷ், தரண்குமார் இசையில் பாடாத பாட்டெல்லாம், பகைமுடி பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. சாம் சி.எஸ்.பின்னணி இசையும் பக்க பலம். ஆர்.டி.ராஜசேகர் நாயகன், நாயகி மட்டுமன்றி கதையின் மாந்தர்கள் அனைவரையும் அழகாக காண்பித்துள்ளார்.

தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக மாறி உள்ள கதிரேசன் தேர்ந்த கமர்ஷியல் இயக்குனர்போல் ஜனரஞ்சகமான படத்தை கொடுத்து இருக்கிறார்.

வழக்கமான வணிக படமாக இருந்தாலும் வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் பெற்றவர்களை கைவிடக்கூடாது என்ற இந்த காலத்துக்கு தேவையான மேசேஜ் சொல்லி இருப்பதை பாராட்டலாம்.


Next Story