அமிதாப் பச்சன், அஜய் தேவ்கனுடன் நடிப்பதே எனது உச்சபட்ச மகிழ்ச்சி; நடிகை ரகுல் பிரீத் சிங்


அமிதாப் பச்சன், அஜய் தேவ்கனுடன் நடிப்பதே எனது உச்சபட்ச மகிழ்ச்சி; நடிகை ரகுல் பிரீத் சிங்
x

நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் தனது பார்ட்னர் ஜாக்கி பக்னானி பற்றி திறந்த மனதுடன் நடிகை ரகுல் பிரீத் சிங் பேட்டியளித்து உள்ளார்.



மும்பை,



தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகைகள் பலருக்கும் இந்தி படங்களில் நடிக்கும் கனவும் இருப்பது வழக்கம்.

அந்த வகையில், இந்தி திரையுலகிற்கு சென்ற நடிகை ரகுல், டே டே பியார் டே டே என்ற படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்தது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. படமும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் மற்றொரு படத்தில் கூட்டணி போட்டுள்ளது.

திகில் காட்சிகள் நிறைந்த ரன்வே 34 என்ற படத்தில் அஜயுடன், ரகுல் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் இயக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளை அஜய் மேற்கொள்கிறார். இந்த படத்தில், பிக் பி என பாலிவுட்டில் அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்.

முதன்முறையாக அவருடன் அஜய் தேவ்கன் சேர்ந்து நடிக்கிறார். இந்த நிலையில், அமிதாப்புடன் படத்தில் ஒன்றாக நடிப்பது பற்றியும், தனது பார்ட்னர் பற்றியும் நடிகை ரகுல் பிரீத் சிங் மகிழ்ச்சியுடனும், வெளிப்படையாகவும் பேட்டி அளித்துள்ளார்.




அவர் அளித்த பேட்டியில், நடிகர் அமிதாப் பச்சனுடன் நடிக்க ஒவ்வொரு நடிகரும் விரும்புவார்கள். உங்களுடைய அனுபவம் எப்படி இருந்தது...?

அவருடன் ஒன்றாக பணியாற்றியது சிறந்த முறையில் இருந்தது. ஒரு நடிகராக உங்களது பயணம் தொடங்கும்போது, ஒரு முறையாவது அவரை சந்திக்க வேண்டும் என உங்களுக்கு கனவு இருக்கும். அவரை சந்தித்தபின், அவருடன் பணியாற்ற விரும்புவீர்கள்.

ஒரே படத்தில் அமித்ஜி மற்றும் அஜய் சாருடன் சேர்ந்து பணியாற்ற போகிறேன் என தெரிந்ததும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். படத்தில் நடிக்க உடனடியாக சரி என்று கூறினேன். அவருடன் சேர்ந்து பணியாற்றியிருப்பது, அவருடைய ஆற்றலை உணர மற்றும் அவருடன் பணிபுரிந்து நிறைய விசயங்களை கற்று கொள்வது ஆகியவை கிடைப்பது மிக பெரிய விசயம்.

அமித்ஜி ஆச்சரியம் நிறைந்தவர். அதனாலேயே பல ஆண்டுகளாக அதிகம் கொண்டாடப்படும் ஸ்டாராக அவர் இருந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு படத்திற்கும் ஒரேமாதிரியான முக்கியத்துவம் கொடுக்கிறார். அவருக்குள் அதிக உற்சாகம் உள்ளது.

அவர், படப்பிடிப்புக்கு திட்டமிட்ட நேரத்திற்கு முன்னரே வந்து விடுவார். அன்றைய படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்ததும், அடுத்த நாளுக்கான காட்சிகளை ஒத்திகை செய்வார். அதுபற்றி நிறைய விவாதிப்பார்.

அவரிடம் 21 பக்கம் கொண்ட வசனங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை 7 அல்லது 8 நாட்கள் வரை படம் ஆக்க வேண்டும். ஆனால், அனைத்து 21 பக்கங்களையும் அவர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார். வேறு எந்த நடிகரும் இதனை செய்ய முடியாது.

அவருடன் முதல் நாள் படப்பிடிப்புக்கு எப்படி நீங்கள் தயாரானீர்கள்?

நான் படபடப்பான ஆள் கிடையாது. உண்மையில், ஒரு நடிகையாக தயாராகி இருந்தேன். ஆனால், உங்களுக்கான சுதந்திரம் அவர் கொடுக்கிறார். வசனங்களுக்கு இடையே, ஒத்திகை எதுவும் பார்த்து கொள்ள விரும்புகிறீர்களா? என கேட்பார்.

அமித்ஜி தனது வசனங்களை ஒரு சில முறை திரும்பி படிக்க விரும்புவார். இது உங்களுக்கான காலஅவகாசம் எடுத்து கொள்ள உதவுகிறது. ஒத்திகை பார்ப்பதில் விருப்பமுள்ளவர் அவர் என ரகுல் கூறியுள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்கு பின் எப்படி இருப்பார்? நட்புடன் பழகுவாரா?

ஆம். ஒவ்வொருவருடனும் பேச அவர் விரும்புவார். அவரது பணியை ஏதோ நமக்கு வழங்கப்பட்ட ஒரு பணியாக அவர் எடுத்து கொண்டது கிடையாது. அவர் எப்போதும் செயலாற்ற தயாராகவே இருப்பவர். ஆனால், 10 நிமிட இடைவெளி கிடைத்து விட்டால் கூட, அதில் உரையாடுவார். கொரோனா கால அனுபவம் பற்றி விவாதித்து உள்ளார். பல விசயங்களை பற்றியும் பேசியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

ஜாக்கி பக்னானி உடனான நட்புறவுக்கு பின்னர், தற்போது உங்களது வாழ்க்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

எனக்குள் எந்த மாற்றமும் நான் பார்க்கவில்லை. ஏன் ஒருவரின் வாழ்க்கை மாற வேண்டும்? நல்லதொரு உறவுக்கான அழகு, ஒருவருக்காக மற்றொருவர் தங்களது வாழ்க்கையை மாற்றி கொள்ள கூடாது என நான் நினைக்கிறேன். நீங்கள் நீங்களாக இருங்கள்.

உங்களுடைய வாழ்க்கையை மாற்றி கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் சிறந்தவர்களாக்கி கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டபோது எப்படி இருந்தீர்களோ அப்படியே விரும்பினீர்கள். பின்னர் ஏன் நீங்கள் உங்களை மாற்றி கொள்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பல நடிகர்கள் தங்களது பார்ட்னரை பற்றி ரகசியம் காப்பது வழக்கம். ஆனால், நீங்கள் வெளிப்படையாக இருப்பது பற்றி...?

பல நடிகைகள், தொடக்கத்தில் இருந்தே தங்களது பார்ட்னருடனான உறவை பற்றி வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அது, நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதனை பொறுத்தது. நீங்கள் ஓர் உறவில் இருக்கிறீர்கள் என்றால் அதனை மறைக்க வேண்டிய தேவை இல்லை என எங்களில் பலர் நம்புகின்றனர். அதன்பின், நாங்கள் வெறும் நண்பர்களே என கூறுகிறோம். ஒவ்வொருவரும் அந்த உறவு பற்றி விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அந்த உறவுக்கு அதுவே மதிப்பு கொண்டு வருகிறது.

உங்களுடைய சகோதர, சகோதரிகள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற பிற உறவுகளை போன்றே இதுவும் சாதாரண ஒன்று. மனிதர்களின் இயற்கையான முன்னேற்ற நிலையது.

உங்களுக்கு என்று குடும்பம் உள்ளது. அதன்பின்னர் ஒரு பார்ட்னர் அதில் வருகிறார். அது இயல்பான ஒன்று. எனினும், உங்களது தொழில் சார்ந்த நிலைப்பாட்டில் எதுவும் பாதிப்பு ஏற்படுத்தி விட கூடாது. உண்மை தன்மையை ஏற்று கொண்ட இரு தனி நபர்கள் நாங்கள். அவ்வளவே.

நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்த பயணத்தில் இருக்கிறோம். உங்களுடைய பார்ட்னர் இதனை புரிந்து கொண்டு, உங்கள் பணியை ஆற்ற இடம் கொடுக்கிறார் என்றால் அது சிறந்தது. ஒரே தொழிலில் உள்ள நன்மையிது என்று அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story