உங்கள் தாய்மொழிப் படங்களை ஏன் இந்தியில் வெளியிடுகிறீர்கள்? - கிச்சா சுதீப்புக்கு அஜய் தேவ்கன் கேள்வி


உங்கள் தாய்மொழிப் படங்களை ஏன் இந்தியில் வெளியிடுகிறீர்கள்? - கிச்சா சுதீப்புக்கு அஜய் தேவ்கன் கேள்வி
x
தினத்தந்தி 27 April 2022 6:08 PM IST (Updated: 27 April 2022 6:08 PM IST)
t-max-icont-min-icon

இந்தி நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் அன்றும், இன்றும், என்றும் இருக்கும் என அஜய் தேவ்கன் கூறியுள்ளார்.

மும்பை,

கடந்த சில மாதங்களாக தென்னிந்திய மொழிகளில் தயாரான திரைப்படங்கள், இந்திய அளவிலும், உலக அளவிலும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றன. குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எ.ஃப்.-2 உள்ளிட்ட திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. 

இந்த நிலையில் கன்னட நடிகர் கிச்சா சுதீப், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, “இந்தி என்பது தேசிய மொழி அல்ல. பாலிவுட் திரைப்படங்களை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டாலும், சமீப காலமாக அவை வெற்றி பெறுவதில்லை. தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்கள் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுகின்றன” என்று தெரிவித்தார்.  

ஆர்.ஆர்.ஆர். மற்றும் கே.ஜி.எஃப்.-2 ஆகிய திரைப்படங்கள் வட மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றது குறித்து கிச்சா சுதீப் தனது கருத்தை தெரிவித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.

இருப்பினும் அவர் கூறிய கருத்துக்கு சில எதிர்ப்புகளும் கிளம்பின. அந்த வகையில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன், தனது டுவிட்டர் பதிவின் மூலம் கிச்சா சுதீப்பின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். அந்த பதிவை முழுவதும் அவர் இந்தியிலேயே பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அஜய் தேவ்கன் கூறியிருப்பதாவது;-

“சகோதரரே, உங்கள் கருத்துப்படி இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் தாய்மொழிப் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறீர்கள்?

இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் அன்றும், இன்றும், என்றும் இருக்கும். ஜன கன மன.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அஜய் தேவ்கனின் இந்த பதிவு டுவிட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

Next Story