ஒன்பது வயதில் ஓட்டப்பந்தயத்தில் சாதனை
23 கிலோ மீட்டர் தூரத்தை, 2 மணி நேரத்தில் கடந்து ‘நோபல் உலக சாதனை’ புத்தகத்தில் இடம் பிடித்தார். ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்துக்கு அடுத்து, உலகின் இரண்டாவது பெரிய சாதனை புத்தகம் ‘நோபல் உலக சாதனை’ புத்தகம் ஆகும்
பட்டுக்கோட்டை, செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி வர்ஷிகா. இவர் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து அதிராம்பட்டினம் வரை ஓடி, அங்கிருந்து மீண்டும் பட்டுக்கோட்டைக்கு ஓடி வந்தார்.
இவ்வாறு 23 கிலோ மீட்டர் தூரத்தை, 2 மணி நேரத்தில் கடந்து ‘நோபல் உலக சாதனை’ புத்தகத்தில் இடம் பிடித்தார். ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்துக்கு அடுத்து, உலகின் இரண்டாவது பெரிய சாதனை புத்தகம் ‘நோபல் உலக சாதனை’ புத்தகம் ஆகும்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் வர்ஷிகாவின் பெற்றோர் மாரிமுத்து-மாலா விவசாயம் செய்கிறார்கள். சகோதரன் சஞ்சித், எட்டாம் வகுப்பு படிக்கிறார்.
வர்ஷிகா குழந்தைப் பருவத்தில், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தாயம், பல்லாங்குழி, செஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாடும்போது, கூர்ந்து கவனித்து வந்தார்.
எந்த விளையாட்டாக இருந்தாலும், மற்ற சிறுமிகளை விட அதிக ஆர்வத்துடன் விளையாடுவதுண்டு.
விளையாட்டின் மீது வர்ஷிகா கொண்டிருந்த ஆர்வத்தை, அவரது உறவினர் சுபா தொடர்ந்து கவனித்து வந்தார். இவர் தேசிய அளவில் ஹேண்ட் பால் போட்டியில் விளையாடியவர். சுபா, வர்ஷிகாவுக்கு 6 வயதில் இருந்து சிறிய அளவில் பயிற்சி கொடுத்து வந்துள்ளார்.
பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சிலம்பம், குத்துச்சண்டை வகுப்புகளில் வர்ஷிகா சேர்ந்தார். அங்கே பயிற்சி பெற்றபோது வர்ஷிகாவிற்கு நீண்ட தூரம் ஓடுவது எளிமையாக இருப்பதைப் பார்த்த பயிற்சியாளர் ஷீலா, வர்ஷிகாவிற்கு சிறப்பு பயிற்சி கொடுத்து ஊக்கப்படுத்தி வந்தார்.
மேலும் நோபல் உலக சாதனை பற்றிய விவரத்தை வர்ஷிகாவிற்கு எடுத்துச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.
வர்ஷிகா 23 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடந்து நோபல் உலக சாதனை படைத்தார்.
2019-ம் ஆண்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான பாக்ஸிங் போட்டியில், 10 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் வர்ஷிகா கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
அதே ஆண்டு அதே அரங்கில் நடைபெற்ற பாக்ஸிங்கிற்கான அகில இந்தியப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
2019-ம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இடையேயான சிலம்பம் போட்டி பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
அப்போட்டியில் வர்ஷிகா தங்கப்பதக்கம் வென்றார். 2020-ம் ஆண்டு நடைபெற்ற 39-வது தஞ்சாவூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.
வர்ஷிகாவிற்கு முன்னுதாரணமாக இருப்பவர் தடகள வீரர் உசேன் போல்டு. விளையாட்டு மட்டுமில்லாமல் ஓவியம், நடனம் போன்றவற்றிலும் வர்ஷிகா ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்.
Related Tags :
Next Story