உலகின் இளைய தலைமை அதிகாரி
பத்து வயதில் எனது நிறுவனத்தை தொடங்கினேன். இதன் மூலம் பல இணையதளங்களை உருவாக்கியுள்ளோம். அடுத்தபடியாக, நானும் எனது நண்பரும் சேர்ந்து புதிய தொழில்நுட்ப நிறுவனம் ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
தனது மூன்றாவது வயதில் இருந்து கணினி தொழில்நுட்பத்தை கற்க ஆரம்பித்தார் கேரளாவைச் சேர்ந்த 23 வயது ஸ்ரீலட்சுமி சுரேஷ். 6 வயதில் வலைத்தளத்தை வடிவமைத்தார். 10 வயதில் வலைத் தளங்கள் வடிவமைக்கும் நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட இணையதளங்களை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். 40-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் உலக அளவிலான விருது
களைப் பெற்றுள்ளார். உலகின் இளைய தலைமை அதிகாரி மற்றும் உலகின் இளைய இணையதள வடிவமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்ற அவரது பேட்டி...
* உங்களின் அறிமுகம்?
நான் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் வசிக்கிறேன். என் அப்பா வழக்கறிஞராகவும், அம்மா ஆசிரியராகவும் பணி புரிகின்றனர். நான் பி.பி.ஏ. படித்து முடித்தேன். தற்போது நிறுவன செயலாளருக்கான படிப்பு படித்து வருகிறேன். இ-டிசைன் நிறுவனத்தில் தலைமை செயலாளராக பணிபுரிந்து 100-க்கும் மேற்பட்ட இணையதளத்தை வடிவமைத்திருக்கிறேன்.
* கணினி மேல் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
எனது சிறுவயதில், அப்பா தனது வேலைகளுக்காக கணினியைப் பயன்படுத்துவதைப் பார்த்தேன். அவர் உபயோகிக்காத நேரத்தில், கணினியில் இருந்த படம் வரையும் மென்பொருளைப் பயன்படுத்தி வரைவதில் உற்சாகம் அடைந்தேன். பின்பு, தட்டச்சுப்பலகையை பயன்படுத்தக் கற்றுக்கொண்டேன். அதை விரைவில் கற்றுக் கொண்டதால் கணினியின் மேல் ஆர்வம் ஏற்பட்டது.
* பெற்றோரின் ஆதரவு பற்றி?
அப்பாவும், அம்மாவும் எனக்கு ஆதரவாக இருந்தனர். என் விருப்பப்படியே என் வேலையை செய்ய அனுமதித்தனர்.
* படிப்பையும், நிறுவனத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்தி கையாளுகிறீர்கள்?
படிப்பையும், நிறுவனத்தையும் ஒரே நேரத்தில் கவனிப்பது சற்று சவாலானது. வகுப்புகளுக்கும் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். அது முடிந்த பிறகு, நிறுவனத்தின் முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்வேன்.
* உங்களுடைய மற்ற பொழுதுபோக்குகள் என்ன?
எனக்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும். பாடல்கள் கேட்பதில் ஆர்வம் உண்டு. திரைப்படங்கள் பார்ப்பதும் பிடிக்கும்.
* உங்கள் நிறுவனத்தைப் பற்றி?
பத்து வயதில் எனது நிறுவனத்தை தொடங்கினேன். இதன் மூலம் பல இணையதளங்களை உருவாக்கியுள்ளோம். அடுத்தபடியாக, நானும் எனது நண்பரும் சேர்ந்து புதிய தொழில்நுட்ப நிறுவனம் ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
* தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெற்ற விருதுகள்?
குழந்தைப்பருவ சாதனையாளருக்கான தேசிய விருதை 2008-ம் ஆண்டு மத்திய அரசிடம் இருந்து பெற்றேன். பின்பு, அமெரிக்காவின் ‘கோல்டன் வெப் விருது’ மற்றும் ‘வெப்மாஸ்டர் இன்க் விருது’ போன்ற விருதுகளும் பெற்றுள்ளேன்.
* எதிர்கால லட்சியம் என்ன?
படிப்பை முடித்துவிட்டு, என்னிடம் உள்ள திறமைகளைக் கொண்டு சமூகத்திற்கு ஏதாவது நன்மை விளைவிக்கும் வேலையை செய்ய விரும்புகிறேன். அது எனக்கும், சமூகத்திற்கும் பலன் தருவதாக இருக்கும்.
* உங்கள் துறையில் பெண்களுக்கு இருக்கும் எதிர்கால வாய்ப்புகள் பற்றி?
இந்தத் துறையில் பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நிறைய வாய்ப்புகளும், பிரகாசமான எதிர்காலமும் உண்டு.
* நமது நாட்டில் பார்க்க விரும்பும் மாற்றம் என்ன?
இப்போது இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நடைமுறைக் கல்வி வழங்க வேண்டும். புத்தகத்தில் இருப்பதை நடைமுறையில் செய்து பார்த்தால் தான் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதனால், மாணவர்கள் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று நம்புகிறேன்.
* திறமையான மாணவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், கணினி துறை அல்லது எந்த துறையை எடுத்தாலும் அதில் தினமும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதனால், மாணவர்கள் தங்களது திறமையை வளர்த்துக்கொண்டு, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காமல், நமது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.
Related Tags :
Next Story