யோகாவில் அசத்தும் சாதனைச் சிறுமி
நெல்லை, வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன்-தேவிப்பிரியா தம்பதியின் மகள் பிரிஷா. இவர் ஏழாம் வகுப்பு படிக்கிறார். யோகா மீது இருந்த ஆர்வத்தால் குழந்தைப் பருவத்தில் இருந்தே பல்வேறு யோகாசனங்களை பயிற்சி செய்து வருகிறார். இதன் பலனாக இதுவரை 70 உலக சாதனைகள் புரிந்திருக்கிறார்.
சாதனை செய்வதற்கு வயது தடையில்லை. அது தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அந்த வகையில் நெல்லையைச் சேர்ந்த 11 வயது சிறுமி பிரிஷா, யோகாவில் பல உலக சாதனைகள் செய்து இருக்கிறார்.
அதன் மூலம் யோகாவின் பயன்களையும், பெருமைகளையும் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகிறார். அவரின் சாதனை அனுபவத்தைப் பார்க்கலாம்.
நெல்லை, வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன்-தேவிப்பிரியா தம்பதியின் மகள் பிரிஷா. இவர் ஏழாம் வகுப்பு படிக்கிறார். யோகா மீது இருந்த ஆர்வத்தால் குழந்தைப் பருவத்தில் இருந்தே பல்வேறு யோகாசனங்களை பயிற்சி செய்து வருகிறார். இதன் பலனாக இதுவரை 70 உலக சாதனைகள் புரிந்திருக்கிறார்.
மேலும் ‘உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர்’ என்ற பட்டத்தை மத்திய அரசின் என்.சி.பி.சி.ஆர் இவருக்கு வழங்கி கவுரவித்து உள்ளது. அதேபோல் ‘உலகின் முதல் இளம் கவுரவ டாக்டர்’ பட்டத்தை நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம் சிறுமி பிரிஷாவுக்கு வழங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிஷா வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்து வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல் துறையினருக்கு இலவசமாக யோகா வகுப்பு எடுக்கிறார்.
இவரின் திறமையைக் கண்டு வியந்த முன்னாள் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, ‘அதிசயிக்கத்தக்க தனித்திறமை உள்ள குழந்தை’ என்று பிரிஷாவைப் பாராட்டினார். பிரிஷா தற்போது யோகாவில் புதிய உலக சாதனை படைப்பதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு, இரண்டு மணி நேரத்தில் 29 உலக சாதனைகளைச் செய்து அசத்தி இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள எலைட் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில், பிரிஷா பங்கேற்ற உலக சாதனை நிகழ்வு நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
மனோன்மணியம் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் சேது, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியதுரை மற்றும் சிவராமன் ஆகியோர் முன்னிலையில், ‘கபோடா’ ஆசனத்தில் அதிவேக மாக ‘ரூபிக்ஸ் க்யூப்’ புதிரை சரி செய்வது, ‘வாமதேவ ஆசனத்தில்’ அதிவேகமாக ‘பிரைன் விட்டா’ விளையாட்டை விளையாடுவது, ‘விபரீத கண்ட பேருண்ட ஆசனத்தில்’ பிரைன் விட்டாவை அதிவேகமாக விளையாடுவது, ஐந்து நிமிடங்கள் கையால் அதிவேகமாக சைக்கிள் ஓட்டுவது, ஸ்கேட்டிங்கில் பந்தை அதிக எண்ணிக்கையில் தரையில் தட்டுவது உள்ளிட்ட 29 உலக சாதனைகளைக் கண்களைக் கட்டிக்கொண்டு செய்து, யோகாவில் புதிய சாதனை படைத்தார்.
இதில் உலக சாதனைக்காக அமெரிக்க நிறுவனம் நிர்ணயித்த இலக்கை விட, பிரிஷா இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சாதனைகளைச் செய்துள்ளார். உலக அளவில் இதுவரை கண்ணை மூடிக்கொண்டு யோகாவில் இது போன்ற சாதனைகளை யாரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிஷா தனது சாதனைகளைப் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சமர்ப்பித்தார்.
Related Tags :
Next Story